பாவனையாளர், விநியோகஸ்தர் இருதரப்பையும் பாதுகாத்தவாறு நடுநிலையான முடிவை அரசு எடுக்கும்

உலகளாவிய நிலவரம் , உலக விலைகள் பொருட்களின் விநியோகம் தொடர்பான நெருக்கடி மற்றும் இலங்கையில் டொலரின் மதிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் சில முடிவுகளை எடுக்க வேண்டியிருக்குமென இணை அமைச்சரவை பேச்சாளர் பெருந்தோட்ட தொழில்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொருட்களின் விலைகளை அதிகரிக்க அரசு தயாராகிறதா என வினவப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர்,

சில நாட்களுக்கு முன்னர் எரிவாயு நிறுவனமொன்று விலைகளை அதிகரிக்க கோரியது. அதற்கு இடமளிக்கவில்லை. இதனையடுத்து சந்தையில் எரிவாயு பிரச்சினை ஏற்பட்டது. பாவனையாளர்கள் பாரிய பிரச்சினைக்கு முகம்கொடுத்தார்கள்.

விநியோகஸ்தர்கள் அந்த விலைகளில் பொருட்களை வழங்காதது பாரிய பிரச்சினையாகும். பாவனையாளர் மற்றும் விநியோகஸ்தர் ஆகிய இருதரப்பையும் பாதுகாத்தவாறு நடுநிலையான முடிவை அரசாங்கம் எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். (பா)

ஷம்ஸ் பாஹிம்