சமூக ஊடகங்களை அரசு ஒருபோதும் கட்டுப்படுத்தாது

ஊடகத்துறை அமைச்சர் டளஸ் தெரிவிப்பு

கடுமையான சட்டங்களால் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த முடியாது எனத் தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர், வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சர் டலஸ் அழகப்பெரும சமூக ஊடகங்களை அரசாங்கம் எந்த வகையிலும் கட்டுப்படுத்த முயலாதெனவும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டங்களை அரசு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமா? என்ற ஊடகவியலாளர் ஒருவர் எடுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

இது குறித்து அமைச்சர் மேலும் கூறுகையில், “வெகுஜன ஊடக அமைச்சர் என்ற வகையிலும் அமைச்சரவை பேச்சாளர் என்ற வகையிலும் சமூக ஊடகங்களை சட்டங்களால் கட்டுப்படுத்த மாட்டோம் என்பதை நான் பொறுப்புடன் கூறுகிறேன். ஆனால் சில கண்ணியமான கொள்கையொன்றை உருவாக்க பத்திரிகை ஆசிரியர் அமைப்பு, தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலிபரப்பாளர் அமைப்பு போன்ற நிறுவனங்கள் இணைந்து உடன்பாட்டுக்கு வருமாறு தயவாகக் கேட்டுக்கொள்கிறேன். ஏதும் ஒரு செய்தி தவறாக வெளியிடப்படும் போது, அதிக எண்ணிக்கையிலான தரப்பினர்களின் மனங்கள் புண்படும். அவற்றைப் பற்றி சிந்தித்து ஓரளவு கட்டுப்பாட்டுக்கு வரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

சட்டதிட்டங்கள் மூலம் ஊடகங்களை கட்டுப்படுத்த முடியாது . ஊடகங்களினால் நடக்கும் தவறான செயற்பாடுகளை நல்ல கலந்துரையாடல் ஊடாக மட்டுமே நிறுத்த முடியும். செய்தி வெளியிடுவதில் சில நெறிமுறைகளை தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். (பா)

ஷம்ஸ் பாஹிம்