12 –19 வயதுக்குட்பட்ட விசேட தேவையுள்ள சிறார்களுக்கு தடுப்பூசி நாளை கொழும்பில் ஆரம்பம்

அரசாங்கத்தின் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் 12 வயதிற்கும் 19 வயதிற்கும் இடைப்பட்ட வலது குறைந்த மற்றும் நிரந்தர நோயாளியான சிறுவர்களுக்கு நாளை வெள்ளிக்கிழமை முதல் பைஸர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான கொரோனா வைரஸ் ஒழிப்புக்கான விசேட செயலணியின் தீர்மானத்துக்கு அமைய இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் முதற்கட்டமாக தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பங்கேற்புடன் ஆரம்பிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து எதிர்வரும் திங்கட்கிழமை மேல் மாகாணத்தில் அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதுடன் அதன் பின்னர் அடுத்த மாதம் நாடளாவிய ரீதியில் விசேட தேவையுடைய மற்றும் நிரந்தர நோயாளிகளான சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.(ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்