கட்சியை மறந்து பிக்பாஸில் மும்முரமாக செயற்படும் கமல்

சட்டசபை தேர்தலின் போது, முதல் அணியாக கூட்டணியை அறிவித்த கமல், தற்போது பிக்பாஸில், மும்முரமாக ஈடுபட்டுள்ளதால், உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை இன்னும் அறிவிக்காமல் உள்ளார் என, அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியினரே புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட பிரதான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

பல இடங்களில் பிரசாரமும் களை கட்டி வருகிறது. வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் தனித்து களமிறங்குவதாக அறிவித்துள்ள கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி, இன்னமும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடவில்லை. கட்சியை மறந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில், கமல் பிசியாக இருப்பதாக கட்சியினர் கூறுகின்றனர்.

'தேர்தலுக்காக கட்சியை தயார்படுத்த வேண்டிய நிலையில், கமல் மக்களையும், மய்யத்தையும் மறந்து, பிக்பாஸில் பிசியாக இருப்பதால், இந்த உள்ளாட்சி தேர்தலிலும், பூஜ்யத்தோடு நடையை கட்ட வேண்டியது தான்' என்றும் கட்சியினர் புலம்புகின்றனர்.அதேநேரத்தில், 'வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும். அதில் நம் பெயர் இடம் பெற்று மனுத்தாக்கல் செய்யலாம்' என மய்ய நிர்வாகிகள் பலர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.