ஜனாதிபதி-ஐ.நா. செயலாளர் கருத்துகளுக்கு பெருவரவேற்பு

ஐக்கிய நாடுகள் சபையின் 76 வது பொதுச்சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, கடந்த ஞாயிறன்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸை சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது ஜனாதிபதியும் ஐ.நா செயலாளரும் தெரிவித்த விடயங்கள் மற்றும் கருத்துகள் உள்நாட்டிலும் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

அதேநேரம் அமைதி சமாதானத்தை விரும்பும் தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் புதிய நம்பிக்கைகளையும் ஏற்படுத்தியுள்ளன. அதாவது 'பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த பல இளைஞர்கள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டமை, விடுவிக்க முடியாத ஏனையோர் தொடர்பான வழக்கு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளமை, நீண்ட காலமாகத் தடுப்புக் காவலிலுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பிலான சட்ட செயற்பாடுகள் முடிவடைந்த பின்னர் அவர்கள் தடுப்பில் இருந்துள்ள காலத்தைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுவித்தல், காணாமல் போனோருக்கு மரணச் சான்றிதழ் வழங்குதல், இந்நாட்டின் உள்ளகப் பிரச்சினைகளை நாட்டுக்குள்ளேயே உள்ளகப் பொறிமுறையின் கீழ் தீர்த்து வைத்தல், அதன் பொருட்டு புலம்பெயர் தமிழர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தமை, எப்போதும் ஐ.நாவுடன் நெருங்கிச் செயற்பட தயார்' உள்ளிட்ட முக்கிய விடயங்களை ஜனாதிபதி வெளிப்படையாக இச்சந்திப்பின் போது தெரிவித்திருக்கின்றார்.

இந்த நிலையில் ஐ.நா செயலாளர், இனங்களுக்கிடையில் ஒற்றுமையைப் பலப்படுத்திக் கொண்டு முன்னோக்கி நகர்வதற்கான முழுமையான ஒத்துழைப்பை மிகவும் நேர்மையான முறையில் ஐ.நா வழங்கும் என உறுதியளித்திருக்கின்றார். உண்மையில் இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியும், ஐ.நா செயலாளரும் தெரிவித்த விடயங்களும் அழைப்பும் உறுதிமொழிகளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். அவற்றின் பெறுமதியையும் கனதியையும் உணர்ந்து கொண்டுள்ள அனைத்து மக்களும் அவற்றைப் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

இச்சந்திப்பின் ஊடாக சாதகமான புதிய சூழல் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இச்சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் தமிழ் மக்களின் பலத்த எதிர்பார்ப்பாக உள்ளது. இந்தச் இச்சந்திப்பு தொடர்பான விடயங்கள் வெளியானதைத் தொடர்ந்து ட்விட்டர் மற்றும் சமூக வலைத்தளங்களில் தமிழ் மக்கள் பதிவிடும் கருத்துகள் வரவேற்கக் கூடியனவாக உள்ளன. அத்தோடு ஜனாதிபதியின் இந்த அழைப்புகளுக்கும் உறுதிமொழிகளுக்கும் உள்நாட்டிலுள்ள ஆன்மீக அமைப்புகளும் கூட நல்வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கின்றன.

இதேவேளை புலம்பெயர்ந்து ஜெர்மன் நாட்டில் வாழும் இலங்கைத் தமிழரான அனஸ்லி ரட்னசிங்கம், 'ஜனாதிபதியின் இந்த அழைப்பையும் அறிவிப்பையும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் 95 வீதமான தமிழ் மக்கள் வரவேற்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றார். அதேநேரம் தமிழ் மக்களின் பழம் பெரும் அரசியல் கட்சியும், அக்கட்சியின் தலைவரான பழம்பெரும் அரசியல்வாதி வீ. ஆனந்தசங்கரி, 'இந்தச் சந்தர்ப்பத்தை தமிழ் மக்களும் உண்மையான சமாதானத்தை விரும்பும் தமிழ் அரசியல் தலைமைகளும் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றுள்ளார்.

அத்தோடு புலம்பெயர்ந்து டென்மார்க் நகரில் வாழும் கரவையூரான் தர்மகுலசிங்கம், 'ஜனாதிபதியின் அறிவிப்பை தமிழ் மக்கள் நல்லதொரு வாய்ப்பாகக் கருத வேண்டும். இதனைப் புரிந்து கொண்டு செயற்படும் பொறுப்பு தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளது கைகளிலேயே உள்ளது' என்று கூறியுள்ளார். இவ்வாறு பலரும் தம் கருத்துகளை இது தொடர்பில் பதிவிட்டும் வெளிப்படுத்தியும் உள்ளனர்.

இக்கருத்துகளை எடுத்து நோக்கும் போது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் ஜனாதிபதியின் அறிவிப்பு மற்றும் அழைப்பை எவ்வளவு தூரம் சாதகமானதாக நோக்குகின்றார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அந்தளவுக்கு அந்த அழைப்பும் அறிவிப்புகளும் முக்கியத்துவம் மிக்கவை.

ஆகவே ஜனாதிபதி - ஐ.நா செயலாளர் சந்திப்பின் ஊடாக உருவாகியுள்ள புதிய சூழலுக்கு கிடைக்கப் பெற்றுள்ள ஆதரவு மற்றும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு செயற்படுவது அனைத்து தரப்பினரதும் பொறுப்பாகும். இப்பொறுப்பு உரிய ஒழுங்கில் நிறைவேற்றப்படும் போது நாட்டில் நம்பிக்கை தரும் சுபீட்சமான எதிர்காலம் உருவாகும் காலம் வெகுதொலைவில் இல்லை.