மிக வயதான இரட்டையர்களாக ஜப்பான் சகோதரிகள் சாதனை

ஜப்பானின் 107 வயதான இரட்டை சகோதரிகள் உலகில் உயிர்வாழும் மிக வயதான இரட்டை சகோதரர்கள் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர்.

உமேனா சுமயாமா மற்றும் கவுமே குடமா என்ற இந்த சகோதரிகள் மற்றொரு ஜப்பானிய இரட்டை சகோதரிகளின் சாதனையையே முறியடித்துள்ளனர். அன்புடன் வாழும் இந்த இரு சகோதரிகளும் 1913 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் திகதி சுடோசிமா தீவில் பிறந்துள்ளனர்.

ஜப்பானின் தேசிய விடுமுறை தினமாக இருக்கும் வயதானவர்களின் நாளான கடந்த திங்கட்கிழமை இந்த புதிய சாதனை பற்றிய அறிவிப்பு வெளியானது.

பல தசாப்தங்களாக தங்கள் சொந்த வாழ்க்கையில் வேலைப்பளுவுடன் இருந்த இந்த சகோதரிகள், 70 வயது வரை அரிதாகவே சந்தித்துள்ளனர். தற்போது தனித்தனியாக பராமரிப்பு இல்லங்களில் வசித்து வரும் இவர்களிடம் கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழ் அளிக்கப்பட்டது. இரு சகோதரிகளும் 107 வயது, 330 நாட்களை கருத்தில் கொண்டு உலகின் வயதான இரட்டையர்கள் என அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, பிரபல ஜப்பானிய இரட்டை சகோதரிகள் கின் நரிதா மற்றும் ஜின் கேனி ஆகியோர் 107 வயது மற்றும் 175 நாட்கள் என்ற முந்தைய சாதனையை இவர்கள் முறியடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் உள்ள 125 மில்லியன் மக்கள் தொகையில் சுமார் 29 வீதமானவர்கள் 65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் என்று சுகாதார நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.