தேசிய கபடி அணிக்கு தெரிவான வீராங்கனைகள், பயிற்றுவிப்பாளர் றோட்டறி கழகத்தால் கௌரவிப்பு

இலங்கை தேசிய கபடி அணிக்கு தெரிவு செய்யப்பட்ட வீராங்கனைகளும், பயிற்றுநர் பரஞ்சோதி அவர்களும் கிளிநொச்சி நகர றோட்டறி கழகத்தால் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

றோட்டறிக் கழக உறுப்பினரும் கொடைவள்ளலுமான S.K நாதனின் நிதி அனுசரணையில் கிளிநொச்சி நகர றோட்டறி கழக தலைவர் ஜெயசுந்தர தலைமையில் கரடிப்போக்கிலுள்ள Rotary Centre இல் இந்த கௌரவிப்பு நிகழ்வு கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. கழகத்தின் தொடக்க தலைவர் வைத்தியர் சத்தியமூர்த்தி மற்றும் கடந்த கால தலைவர்கள் கழகத்தின் அடுத்த ஆண்டு தலைவர் வண. பிதா.ஜோசுவா, உறுப்பினர்கள் கலந்து வீராங்கனைகளை வாழ்த்தி கௌரவித்தனர்.

முதல் கட்டமாக வீராங்கனைகளுக்கு ஊக்குவிப்பு தொகை வழங்கப்பட்டது, தொடர்ந்தும் இவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யவும் கழகம் முன்வந்துள்ளது, அத்தோடு மூவருக்குமான ஒரு வருடத்துக்குரிய சத்துணவை வழங்கும் ஏற்பாட்டினை கழகமூடாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தான் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி குறூப் நிருபர்