கொரோனா தொற்றுக் காலத்தில் புகைத்தல், மது பாவனை வீழ்ச்சி

கொவிட் தொற்றுக் காலத்தில் புகைத்தல் மற்றும் மதுபானம் ஆகியவற்றின் பாவனை கணிசமான அளவு குறைவடைந்துள்ளது. இதற்கு சான்றாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC) வெளியிட்ட அறிக்கையொன்றை குறிப்பிட முடியும். 2019 மே மாதம் 1 ஆம் திகதியிலிருந்து 10 ஆம் திகதி வரை நாட்டின் 25 மாவட்டங்களில் மேற்கோள்ளப்பட்ட ஆய்வின்படி கொவிட் - 19 தொற்றினால் நாடு முடக்கப்பட்ட காலப் பகுதியில் 68 வீதமான புகைபிடிப்போரும், 80 வீதமான மதுபான பாவனையாளர்களும் பாவனையைக் குறைத்துள்ளனர்.

இந்த வீழ்ச்சிகளுக்கான காரணங்கள் முடக்கம் காரணமாக விற்பனை நிலையங்கள் மூடப்பட்டமை, இதனால் சிகரட் மதுபானம் கிடைக்காமை, பாவிப்பதற்கான மனநிலை மற்றும் சந்தர்ப்பம், வாய்ப்புகள் கிடைக்காமை, மற்றும் திடீர் பரிசோதனைகள் போன்றவற்றைக் கூறலாம்.

இப்பாவனையைக் குறைத்ததன் காரணமாக பாவனையாளர்களுக்கு இரத்தோட்டம் சீராகுதல், நுரையீரலில் படிந்துள்ள நச்சுத்தன்மை வெளியேறல், இரத்தத்திலுள்ள நிகோட்டினின் அளவு குறைதல், இதயத் துடிப்பு சீராகுதல் போன்ற நன்மைகளும், இவர்களின் குடும்பத்தினருக்கு பணம் மீதப்படல், குடும்பத்தில் சந்தோஷம், வீட்டில் பிரச்சினைகள் குறைவடைந்துள்ளமை போன்ற நன்மைகளும் ஏற்படுகின்றன.

வியாபாரம் வீழ்ச்சியடைந்த இந்தக் காலகட்டத்தில் சிகரட் மற்றும் மதுபானக் கம்பனிகள் தனது விற்பனையை அதிகரிப்பதற்காக பல தந்திரோபாய செயற்பாடுகளை மேற்கொண்டன.

ஆனால் மறுபுறத்தில் அரசுடன் தனியார் நிறுவனங்களும் இணைந்து இப்பாவனைக்கெதிரான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துதல், புனர்வாழ்வு நிலையங்களை நடைமுறைப்படுத்தல், சட்டத்தை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இவ்விழிப்புணர்வு நிகழ்வுகளில் முக்கியமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் சிகரட் மற்றும் மதுபானம் பாவனையால் ஏற்படும் தாக்கங்கள் பற்றி எடுத்துக் கூறி அப்பாவனையில் வெறுப்பை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களை அதன் பக்கம் செல்லாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சிகரட் புகைப்பதனால் உதடுகள் கருமையடைந்து, தோல் சுருங்குவதால் குறித்த வயதையும் விட வயோதிப தோற்றத்தை அடைதல்,நரம்புத் தளர்ச்சி ஏற்படுதல், கண்பார்வை குறைதல், இரத்தக் குழாய்கள் சுருங்குவதால் மாரடைப்பு மற்றும் பாரிசவாதம் போன்ற நோய்கள் ஏற்படுதல், உடலின் சகல பிரதான உள்ளுறுப்புகளும் பாதிக்கப்பட்டு புற்றுநோய்கள் ஏற்படல், சுவாச நோய்கள், குருதியமுக்கம், நீரழிவு போன்ற நோய்கள் ஏற்படுதல் போன்றன பாதிப்புகளாகும்.

இந்நோய் உள்ளவர்களுக்கு கொவிட்- 19 இன் தாக்கம் அல்லது பாதிப்புகள் அதிகமாக இருப்பதால் இவர்கள் மரணமடையும் வீதம் அதிகமாகும். கடந்த நான்கு வருடங்களில் புகைத்தல், மதுசாரப் பாவனையாளர்கள் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ளது. தொற்றா நோய்களை ஏற்படுத்துவதற்கான முக்கிய நான்கு காரணிகளில் முதற்காரணி புகைத்தலாகும். இரண்டாவது மதுப்பாவனையாகும். மற்றவை உடற்பயிற்சியின்மை, தவறான உணவுப் பழக்கம் போன்றவையாகும்.

புகை பிடிப்பவர்களுக்கு கொவிட் 19 நோய்த்தொற்றுக்கான வாய்ப்பு 14 மடங்குகள் அதிகமாகக் காணப்படுவதாகவும் இவர்கள் இறக்கும் ஆபத்துகளும் அதிகமாகக் காணப்படுவதாகவும் புகைத்தல் மற்றும் போதைப்பொருள் தடுப்புக்கான தேசிய அதிகார சபையின் தலைவர் டொக்டர் சமகி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புகைப்பவர்களுக்கு ஏற்படும் தாக்கங்களை விட அருகிலுள்ள குடும்பத்தினர், நண்பர்களுக்கு பெரிதளவில் தாக்கங்கள் ஏற்படுகின்றன. இலங்கையில் தினமும் 16,61000 சிகரெட்டுகள் புகைக்கப்படுகின்றன. இதனால் ரூபா 400 மில்லியன்செலவு செய்யப்படுகிறது. இவற்றில் 92% வருமானங்கள் வேறு நாடுகளுக்குச் செல்கின்றன. மீதி 8% வருமானம் மட்டுமே இலங்கைக்கு கிடைக்கிறது. இதன்படி இலங்கைக்கு வருடாந்தம் 92.9 பில்லியன் ரூபா இலாபமாகக் கிடைக்கிறது. ஆனால் இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை மற்றும் பராமரிப்பு செலவுக்காக வருடாந்தம் 214 பில்லியன் செலவிடப்படுகின்றது. அதாவது வரவு 30%, செலவு 70% ஆகும்.

மதுசாரப் பாவனை:

மதுசாரம் அருந்துவோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்த அளவே காணப்படுவதால் கொவிட் நோய் தொற்றக் கூடிய வாய்ப்பு அதிகமாகவுள்ளது. மதுசாரம் அருந்துபவர்கள் நீரழிவு நோய், உயர்குருதியமுக்கம், பாரிசவாதம், புற்றுநோய் போன்ற தொற்றா நோய்களால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகமாகக் காணப்படுகின்றது. இவர்கள் கொவிட் வைரசினால் மிக இலகுவாகப் பாதிக்கப்படுகின்றனர். இதனால் இவர்கள் மரணிக்கும் வீதமும் அதிகமாகக் காணப்படுகின்றது.

மதுசாரம் அருந்துவோர்களுக்கு சமூக இடைவெளியை பேணுவதில் சிக்கல்கள் இருக்கின்றன. குறிப்பாக மதுசார சாலைகளில் வரிசையில் நிற்கும் போதும், ஒன்றாக இணைந்து குடிக்கும் போதும் தொற்று ஏற்படுவதற்கும் சமூகப்பரவல் அதிகரிப்பதற்கும் வாய்ப்புக்கள் அதிகமாகும்.

மேலும் பெருந்தோட்டங்களில் காணப்படும் பொருளாதார சிக்கல்கள் , சுகாதார சீர்கேடுகள், தொழில்வாய்ப்பின்மை, குறைந்த ஊதியம் பெறுகின்றமை ஆகிய அடிப்படைப் பிரச்சினைகள் மதுசாரப் பாவனையை அதிகரிக்கின்றமை பல ஆய்வுகளில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு கொவிட் தொற்றின் பாதிப்பை குறைப்பதை மையமாகக் கொண்டு நுவரெலியா பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிலையம் (PHDT) மற்றும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC) ஆகியன இணைந்து தோட்ட நலன்புரி உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரின் முழு களப்பணியுடன் இவ்வருடம் (2021) மே மாதம் தொடக்கம் ஜூலை மாதம் வரை 20 தோட்டங்களில் மதுசார பாவனையாளர்களிடையே பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.

தோட்ட நலன்புரி உத்தியோகத்தர்கள் தங்களின் தோட்டங்களில் மதுப்பாவனையாளர்களை தெரிவு செய்து அவர்களின் நடத்தைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு சில செயற்திட்டங்களைச் செயற்படுத்த முன்வந்தனர். கொவிட் தொற்றிலிருந்து மதுசாரப் பாவனையாளர்களையும் மீட்டெடுக்க வேண்டும் எனும் கருப்பொருளை மையமாக வைத்து இச்செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது . இவற்றில் அந்த உத்தியோகத்தர்கள் இணைந்து நடித்த குறுந்திரைப்படமும் அடங்கும். ஒவ்வொரு பதிவுகளையும் தொலைபேசியினூடாகவே பாவனையாளர்கள் மத்தியில் தோட்ட நலன்புரி உத்தியோகத்தர்கள் கொண்டு சேர்த்திருந்தனர்.

மதுசார பாவனையாளர்களை நேரடியாக தொலைபேசியூடாக அணுகியது மாத்திரமன்றி வீட்டில் உள்ளோர்கள் வாயிலாகவும் அணுகினர் ஒவ்வொரு கட்டங்களையும் உத்தியோகத்தர்கள் சிறப்புற கண்காணித்ததுடன் அவ்வப்போது பாவனையாளர்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வந்தனர். மதுசார பாவனையிலிருந்து எவ்வாறு விடுதலையாவது ? இதில் மதுசார பாவனையாளர்கள் செய்ய வேண்டியவை எவை? வீட்டில் உள்ளோர், மனைவி, பிள்ளைகள், அயலவர்கள் செய்ய வேண்டியவை எவை? என்பது தொடர்பாக அந்தந்த தரப்பினருக்கு தெளிவுபடுத்தியதுடன் தொடர்ச்சியான கண்காணிப்பிலும் ஈடுபட்டனர்.

இவ்வாறு சிறப்பான முறையில் கண்காணித்ததன் பலனாக நுவரெலியா மாவட்டத்திலுள்ள க்ளியரென்டன், சந்திரிகாமம், பெல்மோரல் , ஹென்போல்ட், வோல்ட்ரிம், டெஸ்போர்ட், லோகி, சீன், ராகலை, கொங்கோடியா, ஹய் பொரெஸ்ட், வல்டெமர் டன்சினன், பீட்ரோ, கோணப்பிட்டிய கோர்ட்லோஜ், ஹொலிரூட், ப்ரொட்டோபோர்ட் மடக்கும்புர, லிப்பகல ஆகிய தோட்டங்களில் சுமார் 100 மதுசார பாவனையாளர்கள் மத்தியில் பாரிய மாற்றங்கள் எற்பட்டுள்ளன . குறிப்பாக இத்தோட்டங்களில் மதுசார பாவனை குறைவடைந்துள்ளதோடு, சேமிப்புப் பழக்கங்களும் அதிகரித்துள்ளன.

இவர்கள் அனைவருடனும் பாசத்தோடு நடந்து கொள்கின்றனர் என அத்தோட்டத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களிலுள்ள பெண்கள் தெரிவித்தனர். தொடர்ந்து வழிகாட்டல்களை வழங்கி, முறையான படிமுறையொன்றும் காணப்படுமிடத்து நிச்சயமாக பெருந்தோட்டங்களில் மதுசார பாவனையிலும் பாவனை சார்ந்த பிரச்சினைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தோட்ட நலன்புரி உத்தியோகத்தர்கள் இவ்வெற்றிக்கான காரணகர்த்தாக்கள் ஆவர். கொவிட - 19 தொற்றினால் நாடு பாதிக்கப்பட்ட காலப் பகுதியில் புகைத்தல் மற்றும் மதுப்பாவனையும் கணிசமான அளவு குறைந்துள்ளது எனலாம்.

எஸ்.தஸ்தகீர்
(கல்முனை குறூப் நிருபர்)