பெண்ணே மனிதனின் உயர்ந்த ஊக்கங்கள் எல்லாவற்றிற்கும் விளக்கு

பலநூற்றாண்டுகளாகவே நாம் ஆணிய சிந்தனைக்குள்ளேயே உழல்கின்றோம். அதனால்தான் இன்னும் எதற்கெடுத்தாலும் ஒப்பீடு செய்கின்றோம். அதாவது ஆணுடன் பெண்ணை ஒப்பிட்டு மட்டுப்படுத்தி வருகின்றோம். இது ஒரு சங்கிலித் தொடராக கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. இவை கலாசாரம், சமூக கடப்பாடுகள் என்ற பெயருக்குள் திணிக்கப்பட்டு உள்ளன. ஆனாலும் இவற்றையெல்லாம் கடந்து பெண் வெளிவரவேண்டும். அவ்வாறு வருவதன் பின்னரே அவளால் தனது இலக்கை நோக்கி பயணிக்க முடியும். நாம் ஏற்கனவே இதுவரை படைக்கப்பட்ட இலக்கியங்கள், இலக்கணங்கள் அவை தவிர சினிமா இவையெல்லாம் பெண்களை எப்படி சித்திரித்தன என்பதனை நிறையவே பார்த்துவிட்டோம்.

இவற்றுக்கு அப்பால் யதார்த்தத்தில் பெண் தன்னை எங்கே நிறுத்திக்கொள்ள விரும்புகின்றாள்? எப்படி வாழ விரும்புகின்றாள்? எவற்றை அடைந்திருக்கின்றாள்? என்பதனை நாம் பார்க்க வேண்டும்.அவளுக்கென தனித்த சிந்தனை தெளிவு உண்டு. தனக்குரிய இடத்தை அவள் முழுமையாக எடுத்துக்கொண்டாளா என்றால் அதற்கு பதில் இல்லை. ஆனால் அதனை தொட்டுவிட முயற்சித்துக் கொண்டே இருக்கிறாள். அதன்வழி நம் நாட்டிலும் உலகிலும் சாதனை பெண்களாய் வலம் வந்தவர்களை கொஞ்சம் மீட்டுப்பார்ப்போம்.

பொதுவாக ஒரு ஆணின் வெற்றி அவனுக்கானது. தனியானதாக அதைமட்டும் பற்றியதாக இருக்கும். அவனால் அந்த ஒன்றை மட்டும் சிந்தித்து அதைநோக்கி மட்டும் நடைபோடமுடிகின்றது. ஆனால் ஒரு பெண்ணின் சாதனை அப்படியிருக்காது. அவளது குடும்பம் சார்ந்த நிலைப்பாட்டையும் அவளது வெற்றியோடு இணைத்துக்கொண்டே பயணிப்பாள். சாதனை படிகளில் குடும்பம் சிதைந்துவிடாது. ஆனால் ஆணுடைய வெற்றியில் குடும்பம் சிதையாமல் இருந்தால் அங்கே அதனை கட்டிக்காத்துக் கொண்டு ஒரு பெண் நிச்சயம் இருப்பாள்.

ஒரு நாட்டில் பெண்கள் எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்களோ அவ்வளவு தூரம் அந்நாடு முன்னேறும்.

(-ஜவஹர்லால் நேரு)

அந்த வகையில் நாம் கொஞ்சம் கொஞ்சமாய் பெருமைப்பட்டுக் கொள்வோம். உலகின் முதல் பெண் பிரதமரை கொண்ட நாடு என பெருமை கொண்ட இலங்கை அதன் பின்பு ஜனாதிபதியாகவும், நீதியரசர்களாகவும் பெண்களை ஏற்றுக்கொள்ள தொடங்கியது.ஆனால் விகிதாசார அடிப்படையில் குறைந்தளவானதாக அமைந்துள்ளது எனினும் பெண்களுக்கான உரிமைகளை அவர்கள் மீட்டெடுக்க சார்பானதாகவும் அமைந்துள்ளது.

உலகின் முதலாவது பெண் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்க , இலங்கையின் முதல் பெண் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, இலங்கையின் முதலாவது பெண் நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரள இவை வெறும் ஆரம்பங்களாக அமைந்துள்ளன. சமதளத்தில் , சமகளத்தில் எதையும் வென்றாடும் ஆணுக்கு சரிநிகராய் பெண்கள் தம்மை முன்னிலைப்படுத்துகின்றனர். உலகக் கோப்பை வலைப்பந்தாட்டத் (நெட்போல்) தொடரில் அதிக கோல்கள் அடித்து ஈழத் தமிழ் பெண் தர்ஜினி சிவலிங்கம் சாதனை புரிந்துள்ளார்.

அமெரிக்காவால் வழங்கப்படும் சர்வதேச தைரியமிக்க பெண்களுக்கான விருதுக்கு, இலங்கையின் சட்டத்தரணியும், மனித உரிமை செயற்பாட்டாளருமான ரனிதா ஞானராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.

இவையெல்லாம் கூட மிக சிறிய கோடுகள்தான். நமக்கான பாதைகளை நாம் இன்னும் இன்னும் செப்பனிட வேண்டும். வெல்ல வேண்டும். ஏனென்றால் இந்த உலகில் சாதனையாளராக உருவெடுக்க ஓர் ஆணைகாட்டிலும் பெண் மிக அதிகமாக போராட வேண்டியிருக்கிறது. இன்னும் பல இடங்களில் பெண்கள் கல்வி பெறுவதற்கே பெரும் தடைகளைத் தாண்டியே வரவேண்டியிருந்தது.

சாதாரணமாக ஒருபெண் வீட்டை விட்டு வெளியே வந்து இந்த உலகைக் காணவும் , பலதரப்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளவும், அரசியலில் தன்னை நிறுத்திக் கொள்ளவும், இலக்கிய, இலக்கண வழியில் தான்முத்திரைப் பதிக்கவும், தன்னிலை பொருளாதாரத்தில் மிளிரவும், சுயமாய் இயங்கவும், விரும்பிய இலக்கை நோக்கிய பயணத்திலும், நடத்தைவழியில் சிறுமைகளை உடைத்தெறியவும் இப்படி பலவழிகளிலும் பெண் பல சவால்களுக்கு முகம்கொடுக்கின்றாள். இந்த உலகம் அவள்களாலும் நிரம்பியிருக்கின்றது. அவளுக்கானதை அவளிடமே விட்டுவிடுதலே உலகம் மீட்சிபெற சிறந்தவழியாக அமையும்.

பவதாரணி ராஜசிங்கம்