ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகும் விராட் கோலி

இந்த ஆண்டு இடம்பெறும் இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்குப் பிறகு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னதாக இந்திய ரி 20 அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகும் அறிவிப்பை விராட் கோலி வெளியிட்டிருந்த நிலையில், தற்போது ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவர் பதவியிலிருந்தும் விலகும் அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

தலைவர் பதவியில் இருந்து விலகினாலும் தொடர்ந்து ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையடுவேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியான காணொளியில் இதுபற்றி விராட் கோலி பேசுகையில்,

”ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகத்தினரிடம் பேசினேன். ஐபிஎல் இரண்டாம் பாதி ஆரம்பமாவதற்கு முன்பு ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவராக இதுவே எனது கடைசி ஐபிஎல் தொடராகும்.

கொஞ்ச நாட்களாகவே இது என மனதில் இருந்து வந்தது. அதிக பணிச் சுமையைக் குறைப்பதற்காகவே இந்திய ரி 20 அணித்தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அண்மையில் அறிவித்தேன்.

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி யைத் தவிர வேறு எந்தவொரு அணியிலும் விளையாடுவதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்பதை அணி நிர்வாகத்திடம் தெளிவுபடுத்திவிட்டேன். கடைசி ஐபிஎல் ஆட்டத்தில் விளையாடும் வரை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரராகவே இருக்க விரும்புகிறேன்” என அவர் குறிப்பிட்டிருந்தார்.

33 வயதாகியும் விராட் கோலி உலகின் முன்னணி வீரர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் தலைவராக இருப்பதால் ஏற்பட்டு இருக்கும் பணிச்சுமையை குறைக்கும் நோக்கில் விராட் கோலி ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மறுபுறத்தில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஒரு முறை கூட ஐபிஎல் சம்பியன் பட்டத்தை வென்று கொடுக்கவில்லை என்ற விமர்சனம் கோலி மீது இருந்துவரும் நிலையில், அதுவும் மிகப்பெரிய அழுத்தமாக உருவெடுத்து, அவரது துடுப்பாட்டத்தையும் பாதித்திருந்தது.

2022 பருவத்திற்கான ஐபிஎல் ஏலம் 10 அணிகளுடன் மெகா ஏலமாக நடைபெறவுள்ளது. இதனால் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு புதிய தலைவரை மெகா ஏலத்தில் எடுக்கக்கூடிய வாய்ப்பைக் கொடுப்பதற்கான கோலி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளாதக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.