முன்னோர்களை நினைவு கூரும் மஹாளயபட்சம் இன்று ஆரம்பம்

இராமசந்திர குருக்கள் பாபுசர்மா

எமது முன்னோர்களை நினைவு கூரும் மஹாளயபட்சம் இன்று 21 ஆம் திகதி ஆரம்பமாகி, எதிர்வரும் 3 ஆம் திகதி சந்நியஸ்த மஹாளயம் (பிரம்மச்சாரியர்), 5 ஆம் திகதி சஸ்திரஹத மஹாலயம் (விபத்தால் அகால மரணமடைந்தவர்கள்), 6 ஆம் திகதி மஹாளய அமாவாசை விரதம் ஆகியவற்றுடன் முடிவடைகின்றது.

இக்காலத்தில் திதி தெரியாத இறந்த முன்னோர்களை தானதர்மம் வழங்கி மோட்ஷ விளக்கேற்றி வழிபாடு செய்வது வழக்கமாகும். அந்த வகையில், சிம்ம இராசியிலிருந்து சூரிய பகவான் கன்னி இராசிக்கு பிரவேசிக்கும் மாதம் புரட்டாதி ஆகும்.

புரட்டாதி மாதத்தில் வரக் கூடிய அமாவாசைக்கு முன்னர் 15 நாட்கள் புனிதமானவை. எமதர்மர் பித்ருலோகத்தில் இருக்கும் அனைவரையும் பித்ருக்கள் என்கின்றார். ஒருவர் இறந்து 12 நாட்களுக்கு பிரேதம்தான். 12 நாட்களுக்குப் பின்னரே பித்ரு என்ற ஸ்தானத்தை அடைவர். பின்னர் அனைவரும் 16 நாட்களுக்கு பூலோகத்திற்கு அனுப்பப்படுகின்றனர்.

இக்காலத்தில் அன்னப்பிரார்த்தம் செய்யப்படும். அத்தோடு எள் தர்ப்பணம் செய்வது கட்டாயமாகும். கறுப்பு எள் மிகவும் புனிதமானதாக கருதப்படுகின்றது. மஹாளயபட்சம் என்பது பித்ருக்கள் மகிழ்ச்சியாக இருக்கக் கூடிய காலம்.

அரசமரம் போன்ற புனித விருட்சங்கள் , நதி தீரம் போன்ற பவித்திரமான இடங்களில் மஹாளய அமாவாசை விரதத்தை மேற்கொள்ளலாம். இதனை முன்னோர்கள் இறந்த திதியிலும் மேற்கொள்ளலாம்.

இக்காலத்தில் சுமங்கலியாக இறப்பவர்கள், சந்நியாசியாக இறப்பவர்கள், விபத்துகளில் இறப்பவர்கள் என அனைவருக்கும் ஒவ்வொரு தினம் உண்டு.

குறிப்பாக நவமி திதியில் சுமங்கலியாக இறந்தவர்களுக்கு 7, 5, 3 வரிசைப்படி பெண்களை அழைத்து வெள்ளை பாயாசம் மற்றும் நாட்டு காய்கறியில் சமையல் செய்து கொடுக்க வேண்டும். அத்துடன், மஞ்சள் நிற புடைவையுடன் மங்களகரமான பொருட்களை வைத்து தானம் கொடுக்க வேண்டும்.

விசேடமாக சதுர்தசி திதியன்று அகால மரணமடைந்தவர்களுக்கும் துவாதசியன்று சந்நியாசியாக இறந்தவர்களுக்கும் செய்வது நல்லது. துவாதசி தவிர்ந்த நாட்களில் சந்நியாசிகளுக்கு செய்ய மாட்டார்கள்.

மாஹாளய அமாவாசையில் நுனி வாழையிலையிட்டு, ஒருபக்கம் 5 விதமான பருப்பு வகைகள் மறுபுறம் 5 நாட்டுக் காய்கறிகள் வைத்து எள் நீர் விட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அதனை தானமாக வழங்க வேண்டும். இவ்வாறு செய்ய இயலாதவர்கள் எள்ளும் தண்ணீரும் முன்னோர்களுக்கு வழங்க வேண்டும்.

இதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். அதாவது பித்ருதோஷம் நீங்கி அவர்களின் ஆசி கிடைக்கும்.