- அவரவருக்கு உள்ள பணிகளை நிறைவேற்றினால் அனைத்தையும் அடைய முடியும்
நாட்டில் 200 இற்கும் குறைவான மாணவர்கள் கொண்டதும், தரம் 1-5 கொண்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக, பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் கல்வி அமைச்சின் செயலாளரிடம் இன்று (21) கையளித்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.
இன்று (21) சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
கல்வி அமைச்சினாலேயே பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென சுட்டிக்காட்டிய அவர், அது தொடர்பில் அமைச்சினால் வழிகாட்டல்கள் கோரப்பட்டதற்கு அமைய குறித்த வழிகாட்டல்களை கையளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
தடுப்பூசி வழங்கப்பட்டாலும் இல்லையாயினும் பாடசாலைகளை ஆரம்பிக்க வேண்டியுள்ளதாக தெரிவித்த அவர், பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டுமாயின், அவரவர் தங்களுக்கு உள்ள பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டுமென சுட்டிக்காட்டினார். அநாவசியமான பயணங்களைத் தவிர்த்து, அவசியமாயின் மாத்திரம் வீட்டிலிருந்து வெளியே செல்லுமாறும் கோரிக்கை விடுத்தார்.
உரிய முறையில் முகக்கசவம் அணிந்து வெளியில் செல்வதோடு, ஒவ்வொரு இடத்திலும் மற்றும் வீட்டுக்கு வரும்போதும் கைகளை உரிய முறையில் கிருமி நீக்கம் செய்தல், தேவையற்ற வகையில் ஒன்றுகூடலை தவிர்த்தல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பேணுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
நாட்டை திறப்பது தொடர்பில் கொவிட் செயலணி கூடி முடிவெடுக்கும் எனத் தெரிவித்த அவர், நாட்டின் பொருளாதாரத்துடன் சமாந்தரமாக இப்பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டியதோடு, பொருளாதாரத்தை உரிய முறையில் மேற்கொள்வதற்காகவே அந்தந்த துறைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதாக குறிப்பிட்டார்.
ஆயினும் இவ்வாறு ஒவ்வொரு முறையும் நாட்டை திறக்கும்போதும் மக்கள் ஒன்றுகூடும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களாயின், இதனை உரிய முறையில் மேற்கொள்ள முடியாது, திறப்பதும் மூடுவதுமாக தொடர்ச்சியாக அதை மாத்திரமே செய்ய வேண்டி ஏற்படுமென சுட்டிக்காட்டினார்.
எனவே, தடுப்பூசி செலுத்தலுடன், உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒரு கட்டுப்பாட்டை பேணியவாறு நாட்டைத் திறந்து இவ்வனைத்து விடயங்களையும் மேற்கொள்ள முடியுமாக இருக்குமென நம்பிக்கை தெரிவித்தார்.