சிங்கப்பூர் பிரஜைக்கு கஜானாவை கொள்ளையடிக்க விட்டவர்கள் கப்ராலை பற்றி பேசுகின்றனர்

சிங்கப்பூர் பிரஜைக்கு கஜானாவை கொள்ளையடிக்க விட்டவர்கள் கப்ராலை பற்றி பேசுகின்றனர்-Dilum Amunugama on Appointment of CBSL Governor Ajith Nivard Cabraal

சிங்கப்பூர் பிரஜாவுரிமை பெற்றவரை மத்திய வங்கி ஆளுனராக நியமித்து, பிணைமுறி மோசடியின் மூலம் மத்திய வங்கியின் கஜனாவை காலியாக்கிய நல்லாட்சி அரசின் அங்கத்தவர்கள், இன்று எதிரணியில் அமர்ந்து கொண்டு அஜித் நிவாட் கப்ராலின் நியமனம் பற்றி விமர்சிப்பது நகைப்புக்கு உரியதென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் விளைவால் உலக பொருளாதாரத்தின் மீது ஏற்பட்ட தாக்கத்தில் இருந்து மீண்டெழ இலங்கையும் கஷ்டப்படுகிறது. இத்தகைய சந்தர்ப்பத்தில் நாட்டு நலன் கருதியே ஆற்றலும், அனுபவமும் மிக்க திரு.கப்ரால் அவர்கள் மத்திய வங்கியின் ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார் எனவும்  இராஜாங்க அமைச்சர் கூறினார்.

கண்டி மாவட்ட செயலகத்தில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

'கொவிட் பெருந்தொற்று நிலையால் நாட்டில் சில பொருளாதார நெருக்கடிகள் தோன்றியுள்ளன. இது உலகம் முழுவதும் உள்ள நிலைமையாகும். எனினும், நாட்டின் பொருளாதாரம் முடங்கி விடும் அளவிற்கு வீழ்ச்சி ஏற்படவில்லை. பெருந்தொற்று காரணமாக, வீடுகளில் ஒளிந்திருக்கும் எதிர்க்கட்சி அங்கத்தவர்களுக்கு இது தெரியாது.

நாம் பெருந்தொற்றையும், அபிவிருத்தியையும் சரியாக நிர்வகிக்கிறோம். இன்று சகல கிராமங்களிலும் வீதிகள் கார்ப்பட் முறையில் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு கிராமங்களிலும் இரண்டு மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. வேறெந்த நாடுகளுடன் ஒப்பிட முடியாத வகையில், பெருந்தொற்றையும் சமாளித்து அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுத்து வருகிறோம். கொழும்பு கண்டி அதிவேக நெடுஞ்சாலை விரைவில் திறக்கப்படும்' என்றும் அவர் தெரிவித்தார்.

எம்.ஏ. அமீனுல்லா