மக்களுக்கு பாதுகாப்பான சுகாதார சேவைகள் வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்

உலக சுகாதார நிறுவனத்தின் உலக சுகாதார ஒன்றுகூடல் 72 வது மாநாடு கடந்த 2019 ஆம் வருடம் மே மாதத்தில் நடைபெற்ற வேளையில் WHO 72.6 எனும் வரைவின் பிரகாரம் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதியை உலக நோயாளர் பாதுகாப்பு தினமாக அறிவித்தது.

இந்த முடிவானது அனைத்து உறுப்பு நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு 159 நாடுகளில் நடைமுறைக்கு வந்தது . இதன் முக்கியமான எதிர்பார்ப்பு உலகில் சுகாதார நிலையங்களில் அதாவது அரச மற்றும் தனியார் சுகாதார சேவைகளை பெறும் மக்களுக்கு பாதுகாப்பான சுகாதார சேவைகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதாகும். இதற்கான விழிப்புணர்வை உலக சுகாதார நிறுவனமும் சர்வதேச அமைப்புக்களும் எல்லா நாடுகளிலும் ஏற்படுத்த வேண்டும் என்பதுவும் நோக்கமாகும்.

இதன் அடிப்படையில் உலகில் முதன் முறையாக கடந்த 2019 ஆம் ஆண்டு இத்தினத்தில் உலகளாவிய ரீதியில் நிகழ்வுகள் நடைபெற்றன. உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள ஜெனீவா நகரத்தில் நினைவாலயம் அமைத்து, செம்மஞ்சள் நிற ஒளி தீபம் ஏற்றி ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதேவேளை ஜெனீவாவில் மட்டுமன்றி உலகெங்கிலுமுள்ள எண்பது நகரங்களிலும் இதே போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. இவ்வாறு கடந்த 2019 ஆம் ஆண்டில்தான் உலகளாவிய ரீதியில் இது பிரபல்யப்படுத்தப்பட்டாலும் இங்கிலாந்து நாட்டில் கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்தே நோயாளர் பாதுகாப்புக்கான அடிப்படை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறு வெவ்வேறு நாடுகளும் இதற்கான விசேட தினத்தை பிரகடனம் செய்து வந்துள்ளமையை அவதானிக்கலாம். கடந்த வருடமும் (2020 செப்டம்பர் 17) இதே நாள் இரண்டாவது தடவையாக உலக நோயாளர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த வருடத்தின் தொனிப்பொருளாக ‘நோயாளர் பாதுகாப்பு, சேவையாளர் பாதுகாப்பு’ என்பதாக அமைந்து உலகெங்கும் இது நினைவூட்டப்பட்டது. சுகாதார நிறுவனங்களில் கடமையாற்றும் சகல ஊழியர்களினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதே கடந்த வருடத்தின் எண்ணக்கருவாகக் கொள்ளப்பட்டது. அந்த வகையில் எமது நாட்டிலும் சுகாதார அமைச்சும் , திணைக்களமும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடதக்கது.

இவ்வருடமும் இதே தினத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஒளி விளக்குகள் ஏற்றி இந்நிகழ்வை பிரசித்தப்படுத்துமாறு உலக சுகாதார நிறுவனம் சகல சுகாதார நிறுவனங்களையும் சகல நாடுகளையும் வேண்டிக் கொண்டுள்ளது. இதற்காக அமைக்கப்படும் கட்டடங்கள் காலாகாலமாக கவனிக்கப்பட்டு நினைவு நாள் அனுஷ்டிக்கவும் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை நடத்தவும் எதிர்பார்ப்புக்கள் நினைவூட்டப்படவும் உதவியாக இருக்கும் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் எதிர்வுகூறல் ஆகும்.

இந்த வருடத்திற்கான தொனிப்பொருள் ‘பாதுகாப்பான தாய்மைக்கும் சிசுவுக்குமான பராமரிப்பு’ என்பதாகும் . இது உலக சுகாதார நிறுவனத்தின் மூலம் சகல பங்காளர்களையும் ஊக்குவிக்கும் திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட ‘பாதுகாப்பானதும் கௌரவமாவதுமான குழந்தைப்பேறுக்கு நடவடிக்கை எடுப்போம்’ என்பதை அடிப்படையாகக் கொண்டதாகும் உலகளாவிய ரீதியில் நாளொன்றுக்கு ஏறத்தாழ 80 கர்ப்பிணிப் பெண்கள் தடுக்கப்படக் கூடிய காரணங்களால் இறந்து போகிறார்கள். குழந்தைப்பேறு மற்றும் கர்ப்பிணி சம்பந்தப்பட்ட நிலமைகளில் 6700 சிசுக்கள் நாளாந்தம் மரணிக்கின்றன. இது ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணங்களின் சுமார் அரைவாசியாகும்

முழு உலகிலும் ஒவ்வொரு வருடமும் இரண்டு மில்லியன் குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன. பாதுகாப்பற்ற சுகாதார பராமரிப்பு வழங்கப்படுவதானாலேயே இந்த இறப்புக்கள் நிகழ்வதால், பாதுகாப்பான , தரமான சேவையை வழங்குவதன் ஊடாக இவற்றை தவிர்த்துக் கொள்ள முடியுமென ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. இதற்கு நன்கு பயிற்றப்பட்ட சுகாதார ஊழியர்களும் உபகரணங்களும் அவசியமாகும்.

இவ்வருடத்திற்கான இலக்குகள்:

01. கர்ப்பிணித் தாய்களினதும் சிசுக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய உலகளாவிய விழிப்புணர்வை அதிகரித்தல் (விசேடமாக குழந்தைப்பேறின் போது)

02. இதற்காக பல்வேறுபட்ட பங்காளர்களை ஒன்றிணைத்து, வினைத்திறனானதும் புத்தாக்கமானதுமான திட்டங்களை வரைதல்.

03. கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் சிசுக்களுக்கும் பாதுகாப்பு வேண்டி அனைத்து பங்காளர்களையும் அழைத்து உடனடியானதும் நீடித்து நிலைக்கக் கூடியதுமான பணிகளை முன்னெடுத்தல்.

14. பிரசவத்தின் போது தாய்மாரினதும், சிசுக்களினதும் பாதுகாப்புக்காக சிறந்த வழிமுறைகள் பற்றி பரிந்துரைப்பு செய்தல்.

குறிப்பிட்ட தினத்தில் இணையவழி மற்றும் நேரடி நிகழ்வுகளை நடத்தி இத்தினத்தை நினைவு கூருமாறு உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டியுள்ளது. கொவிட் - 19 தொற்றுகை காலமாதலால், சுகாதார வழிமுறைகளை பேண ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

உலக நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு பொருத்தமான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது எமது கடமையாகும். பிராந்திய சுகாதார சேவைகள் பணியாளர் பணிமனைகளில் இயங்கிவரும் தர மற்றும் பாதுகாப்பு (Quality & Safety unit) பிரிவினதும், தாய் மற்றும் சேய் நல (Matemal & Child Health Unit) பிரிவினதும் ஒன்றிணைந்த வழிகாட்டலில், சுகாதார வைத்திய அலுவலகங்களிலும், வைத்தியசாலைகளிலும் இந்த நிகழ்வுகள் நடத்தப்பட முடியும். இதில் முக்கியமாக சுகாதார வைத்திய அதிகாரிகளும், வைத்திய பொறுப்பதிகாரிகளும் பொதுச் சுகாதார மாதுக்களும் பங்கெடுத்து நிகழ்வுகளை ஒருங்கிணைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

டொக்டர் எம்.பி.அப்துல் வாஜித்
(பிரதிப் பணிப்பாளர்) பிராந்திய
சுகாதார சேவைகள் பணிப்பாளர்
அலுவலகம், கல்முனை.