கொவிட் நெருக்கடிக்கு மத்தியிலும் தடையெதுவுமின்றி நீர் விநியோகம்

ஆரோக்கியமான மனித வாழ்வின் ஜீவநாடியாக சுத்தமான நீர் உள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையானது தனது 270 நீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து 343இற்கு மேற்பட்ட நீர் வழங்கல் திட்டங்களின் ஊடாக 24 இலட்சத்திற்கு மேற்பட்ட நீர் இணைப்புகளுக்கு பாதுகாப்பான குடிநீரை தொடர் கண்காணிப்பின் ஊடாக வழங்கி வருகின்றது. சர்வதேச, தேசிய தர நிர்ணயங்களுக்கேற்ப கொவிட் சவாலுக்கு மத்தியிலும் இச்சேவை மேற்கொள்ளப்படுகின்றது.

ஒரு அலகு நீரை (1000 லீற்றர்) சுத்திகரித்து விநியோகிப்பதற்காக சபைக்கு ரூபா 50 இற்கு மேற்பட்ட தொகை செலவிடப்படுகிறது. ஆனால் பாவனையாளர்களிடமிருந்து ஒரு அலகுக்கான கட்டணமாக முறையே சாதாரண பாவனையாளராயின் 12.00 ரூபாவும், சமுர்த்தி பயனாளியாயின் 05.00 ரூபாவும் (பொருத்தமான வரிகளுடன்) அறவிடப்படுகின்றது. இதனை செலவிடப்படும் தொகையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது வீடுகளுக்கான நீர் ஒரு சலுகை கட்டணத்திலேயே வழங்கப்படுகிறது எனலாம்.

தேசிய நீர் வழங்கல் சபை சுத்தமான நீரை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வருடாந்தம் ரூ. 20,000 மில்லியனுக்கு மேற்பட்ட பெரும் தொகை பணத்தினை செலவு செய்கிறது. (இயக்குதல் மற்றும் பராமரிப்பு, மின்சாரம், எரிபொருள், இரசாயனம், உதிரிப்பாகங்கள் கொள்வனவு)

அத்தியவசிய சேவை என்ற அடிப்படையில் கொவிட் இடர்நிலைக்கு மத்தியிலும் அவ்வப்போது ஏற்படும் அவசர திருத்த பணிகளையும் இரவு பகல் பாராது மேற்கொண்டு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பணியாற்றி வருகின்றது.

நீர் பாவனையாளர்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினர் தமது நீர்க் கட்டணத்தை உரிய வேளையில் செலுத்தி வரும் நிலையில், பெரும்பாலானோர் காலம் தாழ்த்தியே செலுத்துகின்றனர். தற்போதைய நிலையில் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு நீர் பாவனையாளர்களால் செலுத்தப்பட வேண்டிய ரூ. 750 கோடி நிலுவையாக உள்ளது. அதே நேரம் செலுத்த வேண்டிய ரூ. 5000.00 இற்கு மேற்பட்ட தொகையில் ஒரு வருட காலமாக ஒரு சதத்தையேனும் செலுத்தாத 39,000 பாவனையாளர்கள் உள்ளனர்.

இவ்வாறான நிலையில் தொடர்ந்து நீர் வழங்கல் மேற்கொள்வது மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது என சபையின் பொது முகாமையாளரினால் அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருப்பதனால் வங்கிகள் மற்றும் தபாலகங்களின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உள்ளதனால், பாவனையாளர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்பான முறையில் தமது வீடுகளில் இருந்தவாறே நீர் கட்டணங்களை சபையின் www.waterboard.lk என்னும் இணையத்தளம் அல்லது கையடக்கத் தொலைபேசி விண்ணப்பத்தின் (Mobile Apps) மூலமும் (NWSDB SelfCare App/ SMART pay app) எதுவித மேலதிக கட்டணம், நேர விரயம், இதர சிரமம் இன்றி செலுத்திக் கொள்வதற்கான வசதிகளை சபை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த மேலதிக தகவல்களை 0112623623 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலமாகவும் அறிந்து கொள்ள முடியும்.

மேலும் நிதி நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ள Mobile Apps மற்றும் இணைய வங்கி சேவைகளையும் பயன்படுத்தி பாவனையாளர்கள் தமது நீர் கட்டணங்களை செலுத்திக் கொள்ள முடியும் (மக்கள் வங்கி, இலங்கை வங்கி உட்பட)

அத்துடன் சபையின் பிரதான காரியாலயங்களிலுள்ள காசாளர் கருமபீடங்களிலும் வார நாட்களில் செலுத்தலாம். தற்போது நாடு பூராகவும் பாவனையாளர்களின் நலன் கருதி தற்காலிகமாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள நடமாடும் காசாளர் வாகனங்களிலும் மற்றும் நீர் வழங்கல் திட்ட காரியாலயங்களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள தற்காலிக காசாளர் கருமபீடங்களிலும் செலுத்திக் கொள்ளலாம். இதன் போது கொவிட் சுகாதார வழிமுறைகளைப் பேணி செலுத்திக் கொள்வதற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன. உரிய அறிவுறுத்தல்களுக்கேற்ப பாவனையாளர்கள் தமது நீர்க் கட்டணங்களை செலுத்திக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர். இதன் போது கடைப்பிடிக்க வேண்டிய சமூக இடைவெளி, சுகாதார நடைமுறைகளை முறையாக பேணுமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தினமும் தொலைபேசி பாவனைக்காக நூறு அல்லது பல நூறு ரூபாக்கள் மீள்நிரப்பப்படுகின்றன. ஆனால் நாம் பயன்படுத்திய எமது ஆரோக்கியத்துக்கு துணைநிற்கின்ற மற்றும் சலுகைக் கட்டணத்தில் வழங்கப்படும் நீருக்கான கட்டணத்தை செலுத்துவதில் அலட்சியமாக இருப்பது எந்தவிதத்திலும் நியாயமாகாது என்பதனை பாவனையாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

பாவனையாளர்கள் தமக்கான நீர்ப் பட்டியல் நிலுவைகள் பட்டியல் கிடைக்கப் பெற்றவுடன் கட்டணத்தை செலுத்துவதன் மூலம் 1.5 சதவீத கழிவினை பெற்றுக் கொள்ள முடிவதோடு தாமதமாகும் நிலுவைகளுக்கு 2.5 சதவீதம் மேலதிகமாக அறவிடப்படும்.

மேலும் உங்களது நீர்ப்பட்டியல் குறித்த முறைப்பாடுகள், தெளிவின்மை காணப்படுமிடத்து அவற்றுக்கான தீர்வுகளை நீர்ப்பட்டியலின் பின்பக்கத்தில் உள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை மேற்கொண்டு தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும்.

1. உங்களது நீர்ப்பட்டியல் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு 0719399999 எனும் இலக்கத்திற்கு உங்கள் நீர்ப் பட்டியல் கணக்கிலக்கத்தினை (நீர்ப்பட்டியலின் இடதுபக்க மேல் மூலையில் உள்ளது) xx / xxx / xxx/ xxx/ மாதிரியின் பிரகாரம் குறுந்தகவல் (SMS) அனுப்புதல்

2. உங்களது நீர்ப் பட்டியலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்வதற்கு மேற்படி 0719399999 இலக்கத்திற்கு நீர்ப் பட்டியல் கணக்கிலக்கத்துடன் ((xx/xx/xxx/xxx/xx மாதிரியின் பிரகாரம்) உங்கள் மின்னஞ்சல் முகவரியை (xx/xx/xxx/xxx/xx [email protected] எனும் மாதிரியின் பிரகாரம் குறுந்தகவல் அனுப்புதல்

மேலே உள்ள இலவச சேவைகளை நீங்கள் செயற்படுத்தி அவைகளின் பயன்களை பெற்றுக் கொள்ளுமாறும் நினைவூட்டுகின்றறோம்.

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக நாளாந்தம் பல தடவைகள் கைகளை கழுவுவதற்கும் உடலை சுத்தம் செய்வதற்கும் ஆடைகளை துவைப்பதற்கும் ஆவி பிடிப்பதற்கும் சுத்தமான நீரின் தேவையானது இன்றியமையாததாகும். சுத்தமான நீரை மக்களுக்கு வழங்கி மகத்தான பணி மேற்கொண்டுவரும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நிதி நிலையை கருத்திற் கொண்டு பாவனையாளர்கள் தமது கடமையை உணர்ந்து தாம் பாவித்த நீருக்கான கட்டணத்தை செலுத்த வேண்டியது அவர்களின் தலையாய பொறுப்பாகும்.

எம்.எஸ்.எம்.சறூக்
(சிரேஷ்ட சமூகவியலாளார், பிராந்திய
முகாமையாளர் காரியாலயம்)
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்
சபை, அக்கரைப்பற்று