தென்சீன கடல் உரிமையை பாதுகாப்போம்; பிலிப்பைன்ஸ் அறிவிப்பு

தென்சீனக் கடலில் சீனா முழுமையான ஆதிக்கம் செலுத்தும் அந்நாட்டின் புதிய சட்டத்துக்கு தான் உடன்படப்போவதில்லை என பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்துள்ளது. இக்கடல் பரப்பில் உரிமை கொண்டவர்களாக இருப்பதாகவே நாம் கருதுகிறோம் என்று அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் டெல்பின் லொரென்ஸானா தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவுடனான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தை மீண்டும் தொடரப் போவதாக அவர் கூறியிருப்பதாகவும் அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

தனது கடல்சார் போக்குவரத்து பாதுகாப்பு சட்டத்தில் சீனா சமீபத்தில் திருத்தம் செய்தது. இதன் பிரகாரம் இக்கடல் பிராந்தியத்தில் நுழையும் வெளிநாட்டுக் கப்பல்கள் சீனாவின் முன் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். வெளிநாட்டுக் கப்பல்களின் நடமாட்டம் நாட்டின் உள்ளக மற்றும் கடல் பிரதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக இதற்கு சீனா காரணம் கூறுகிறது.

இதே சமயம் கடந்த வாரம் பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு அமைச்சர் லொரென்ஸானாவை சந்தித்த அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லொயிட் ஒஸ்டின், இந்தோ – பசிபிக் கடல் பிராந்திய போக்குவரத்து சுதந்திரத்தையும், பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை, சுபீட்சம் என்பனவற்றை இரு நாடுகளும் உறுதி செய்யக் கடமைப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். இந்தோ – பசுபிக் பிராந்தியம் என்பது இந்து சமுத்திரம், மேற்கு மற்றும் மத்திய பசுபிக் சமுத்திரம் மற்றும் தென் சீனக் கடல் என்பனவற்றை உள்ளடக்கியது.

அமெரிக்காவுடன் பிலிப்பைன்ஸ் செய்து கொண்டிருந்த இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை 18 மாதங்களுக்கு முன்னர் பிலிப்பைன்ஸ் இரத்துச் செய்திருந்தது. எனினும் தெற்காசிய தீவுக் கூட்டப் பிராந்திய பாதுகாப்புக்கு சீனா தன் பங்களிப்பை வழங்கவில்லை என்று கருதிய பிலிப்பைன்ஸ் தற்போது அமெரிக்காவுடனான தன் பழைய ஒப்பந்தத்தை புதுப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.