ரி20 உலகக் கிண்ணத்தை தொடர்ந்து தலைமைத்துவத்தை துறக்கிறேன்

ரி20 உலகக் கிண்ணத்தை தொடர்ந்து தலைமைத்துவத்தை துறக்கிறேன்-Virat Kohli Decided to Step Down as T20 Captain After T20 World Cup

- அடுத்த தலைவர் ரோஹித் சர்மா?

ரி20 உலக கிண்ணத் தொடருக்கு பின்னர், ரி20 தலைமைத்துவத்திலிருந்து விலகவுள்ளதாக, இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி அறிவித்துள்ளார்.

2017 முதல் இந்திய அணியின் டெஸ்ட், ஒருநாள், ரி20 ஆகிய அனைத்து வகையான அணிகளினதும் தலைவராக இருந்து வரும் விராட் கோலி, டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியை முழுமையாக வழிநடத்தும் வகையில் இம்முடிவை எடுத்துள்ளதாக, கோலி அறிவித்துள்ளார்.

தனது சமூக வலைத்தள பக்கங்களில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

 

இது தொடர்பாக பல்வேறு மட்டங்களிலும் கடந்த சில தினங்களாக பல்வேறு செய்திகள் வெளியாகி வந்த நிலையில் தற்போது விராட் கோலி இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

துடுப்பாட்டத்தில் மிகச் சிறந்து விளங்கிய விராட் கோலி, கடந்த இரண்டு ஆண்டுகளாக, எவ்வித போட்டிகளிலும் சதம் பெற முடியாமல் திணறி வருவதாகவும், இந்திய அணிக்கு தலைவராக செயற்படுவதன் காரணமாகவே அவரது துடுப்பாட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பலர் கூறி வருகின்றனர்.

ஆயினும், கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்பாக ஓட்டங்களை குவித்து வந்த அவரை நல்ல வகையில் விமர்சனங்கள் செய்யாதவர்கள், தற்போது அவர் சற்றுத் தடுமாற்றம் அடைந்துள்ள நிலையில் பலரும் கருத்து சொல்ல வந்துவிட்டதாக, இந்திய அணியின் முன்னாள் தலைவர் கபில் தேவ் அவருக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளார்.

விராட் கோலி இப்போது மிகவும் ஆற்றல்மிக்க அனுபவமிக்க கிரிக்கெட் வீரராக இருக்கிறார். அவர் விரைவில் சதம், இரட்டை சதமல்ல... 300 ரன்கள் கூட குவிப்பார்' என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ரி20 உலக கிண்ணத் தொடருக்குப் பின் இந்திய அணியின் ரி20 அணித் தலைவராக ரோஹித் சர்மா நியமிக்கப்படலாமென தெரிவிக்கப்படுகின்றது.

ரி20 உலகக் கிண்ணத்தை தொடர்ந்து தலைமைத்துவத்தை துறக்கிறேன்-Virat Kohli Decided to Step Down as T20 Captain After T20 World Cup