தென்னாபிரிக்க ரி20 தொடரில் ஆட்ட நிர்ணயம்?

தென்னாபிரிக்க ரி20 தொடரில் ஆட்ட நிர்ணயம்?-SLvSA-T20-Series-SLC Denies Allegations Leveled by Certain Media Reports

- சில ஊடகங்களின் பொறுப்பற்ற செய்திகளுக்கு இலங்கை கிரிக்கெட் மறுப்புத் தெரிவிப்பு
- ரி20 கிண்ணத்திற்கு தயாராகும் வீரர்களை நம்பிக்கை இழக்கச் செய்கிறது

தென்னாபிரிக்க அணியுடனான ரி20 தொடரில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றுள்ளதாக, ஊடகங்களில் வெளியிடப்பட்டு வரும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.

இலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ரி20 தொடரில் இலங்கை அணியைச் சேர்ந்த ஒரு சில வீரர்கள் இத்தொடரில் உரிய வகையில் பங்களிக்கவில்லை அல்லது வேண்டுமென்றே களத்தில் சரியாக செயல்படவில்லையென ஒரு சில ஊடகங்களில் வெளியான செய்திகளை மறுப்பதாக, இலங்கை கிரிக்கெட் (SLC) நிறுவனம் முழுமையாக மறுப்பதாக அதில் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அணியின் நிர்வாகத்திடமிருந்தோ அல்லது வேறு எந்த தரப்பிலிருந்தோ இலங்கை கிரிக்கெட்டுக்கு எவ்வித முறைபாடுகளும் கிடைக்கவில்லையென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வென்ற அதே அணியே ரி20 தொடரிலும் விளையாடடியதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியானது, தென்னாபிரிக்க அணியுடனான ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது மாத்திரமல்லாமல், உலகக் கிண்ணத்தின் சுப்பர் லீக் லீக் போட்டிகளுக்கு அவசியமான புள்ளிகளையும் பெற்றதுடன் ஒருநாள் கிரிக்கெட் அணி தரவரிசையிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது.

இலங்கை தேசிய அணி, அண்மைக் காலமாக முக்கியமான பல போட்டிகளில் வெற்றி பெற்று சரியான திசையில் செல்வதன் மூலம் முன்னேறி வருகிறதென, இரசிகர்கள் நம்புகின்றனர் என, இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

எனவே, இதுபோன்ற பொறுப்பற்ற ஊடக பிரச்சாரங்களால், வீரர்களின் மன ஒருமைப்பாடு கடுமையாக பாதிக்கப்படும் என்றும், எதிர்வரும் ரி20 உலகக் கிண்ணத்திற்கான தயார்படுத்தலுக்கு இது ஒரு நல்ல சூழ்நிலையாக இருக்காது என்றும் இலங்கை கிரிக்கெட் வலியுறுத்தியுள்ளது.