கொழும்பு–புத்தளம் பிரதான வீதியின் நிர்மாணப்பணிகள் துரிதம்

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தீர்வு

கொழும்பு - புத்தளம் பிரதான வீதியில் வென்னப்புவ, மாரவில, மஹவெல, மாதம்மை, சிலாபம் ஆகிய பகுதிகளில் ஏற்படுகின்ற கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, அதற்கு தீர்வு வழங்கும் வகையில் இரணவில ஊடாக சிலாபம் வரை பீ 640 வீதியின் அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்துமாறு கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார். 
32 கிலோ மீற்றர் தூரம் கொண்ட இந்த வீதி இரு பாதைகளைக் கொண்டதாகும். இதுவரையில் 18 கிலோ மீற்றர் வீதி நிர்மாணப்பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த வீதியில் பருதெல்பொல பிரதேசத்தில் 100 மீற்றர் தூரம் கொண்ட பாலத்தின் நிர்மாணப்பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதேபோன்று தொடுவாவ பிரதேசத்தில் 80 மீற்றர் நீளமுடைய பாலத்தின் நிர்மாணப்பணிகளும் நிறைவடைந்துள்ளன.

போக்குவரத்து நெறிசலுக்கு தீர்வு காண்பதோடு மாத்திரமின்றி, சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கும் இந்த வீதி நிர்மாணப்பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்