- போதைப்பொருள் விற்பனையாளர் உள்ளிட்ட ஐவர் கைது
- வானை நோக்கி பொலிஸார் துப்பாக்கிச்சூடு
இன்றையதினம் (15) தெமட்டகொடை, காளிபுள்ள வத்த பகுதியில் ஹெரோயின் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டதில், பொலிஸார் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
இதன்போது போதைப்பொருள் கடத்தற்காரர் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பு குற்றப் பிரிவு பொலிஸாருக்கு (CCD)கிடைத்த தகவலொன்றுக்கு அமைய, அப்பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட மேலும் ஐவர் தெமட்டகொடை, காளிபுள்ள வத்த பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 10.2 கிராம் ஹெரோயினை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
இதன்போது குறித்த சந்தேகநபருக்கு வேண்டப்பட்டவர்கள் உள்ளிட்ட ஒரு சில நபர்களால் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டு குறித்த சந்தேகநபரை மீட்க முயற்சி செய்ததாக அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து குறித்த குழுவுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியினால் வானை நோக்கி துப்பாக்கிச்சூடு மேற்கொண்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன் பின்னர் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டு, கடமைக்கு இடையூறு விளைவித்த மேலும் நால்வரை CCD யினர் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தில் 2 பொலிஸார் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையிலான குழுவொன்று இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.