கட்டுப்பாட்டு விலைகளை மீறி பொருட்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை

அத்தியாவசியப் பொருட்கள் அரசின் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யப்படுவதை உறுதிப்படுத்தும் விழிப்பூட்டல் நடவடிக்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசினால் அத்தியாவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டதையடுத்து அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தும் விசேட கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதன் போது அரிசி ஆலைகள், பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத நெற்களஞ்சிய உரிமையாளர்கள், வியாபாரிகள் போன்றவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அரசின் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்வதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாகவும், இதற்கான தொடர் செயற்றிட்டம் தயாரித்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அவசரகாலச் சட்டத்திற்கமைவாக கட்டுப்பாட்டு விலையில் அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்யாமல் பதுக்கி வைத்திருப்பவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்காக மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கமைவாக இச்செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தவிர, நெல்லை பதுக்கி வைத்திருப்பவர்கள், களஞ்சியப்படுத்தி வைத்திருப்பவர்களிடமிருந்து விவசாய நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு அவற்றை நெற்சந்தைப்படுத்தும் சபை மூலம் கொள்வனவு செய்தல் அல்லது சட்டநடவடிக்கை எடுத்தல் போன்ற விடயங்கள் சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இதற்காக நுகர்வோர் அதிகாரசபை, பிரதேச செயலாளர்கள், பொலிஸ் உட்பட நெல் சந்தைப்படுத்தும் அதிகார சபை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் சகல வியாபார நிலையங்களிலும் அத்தியாவசியப் பொருட்களை அரசின் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்தல், தட்டுப்பாடின்றி பொருட்களை விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைககளைக் கண்காணித்து விழிப்பூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பிரதேச செயலாளர்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

இவ்விசேட கூட்டத்தில் நுகர்வோர் அதிகார சபை உதவிப் பணிப்பாளர் ஆர்.எப். அன்வர் சதாத், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல். ஆர். குமாரசிறி, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், பிரதேச செயலாளர்கள், நெற்சந்தைப்படுத்தல் அதிகார சபை, விவசாய திணைக்களம், மாவட்ட விவசாய திணைக்களம் போன்றவற்றின் உயர் அதிகாரிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

யூ.எல்.எம். ஹரீஸ்
(வாழைச்சேனை விசேட நிருபர்)