கிழக்கில் போதைவஸ்து ஊடுருவலை முறியடிக்க பொலிசார் தீவிர வேட்டை!

நாகரிக வளர்ச்சிப் பாதையில் சமூகம் செல்கின்ற அதேவேளை சில தீய பழக்கங்கள் சமூகத்தில் வலிமை பெற்றுச் செல்கின்றன. குறிப்பாக போதைப்பொருள் பாவனைக்கு இளைஞர் சமூகம் அடிமையாகி வருவது கவலைக்குரிய ஒரு விடயமாகும்.

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பிரதேசங்களில் போதைப்பொருள் வியாபாரிகளின் ஊடுருவல் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகையில், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனையை ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய தேவையும் எழுந்துள்ளது. போதைப்பொருள் குற்றங்களை நாட்டில் முற்றாக ஒழிக்க அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இந்த நடவடிக்கையில் கிழக்கில் பொலிசார் கடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதைக் காண முடிகின்றது. நாளாந்தம் நாட்டின் நாலா பகுதிகளிலும் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை குற்றச்சாட்டின் பேரில் பலர் கைது செய்யப்படுவதையும் போதைப் பொருட்கள் மீட்கப்படுவதையும் ஊடகங்கள் ஊடாக நாளாந்தம் அறிகிறோம்.

கிழக்கு மாகாணத்தின் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் போதைப்பொருளின் ஊடுருவல் தற்போது அதிகரித்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் அண்மைக் காலமாக போதைவஸ்து கடத்தல் அதிகரித்துள்ளது.

அதேசமயம் சமூகத்தில் இருந்து போதைப்பொருளை ஒழிக்க வேண்டுமென்பதில் மக்கள் உறுதியாக உள்ளனரென்பது தெரிகின்றது. போதைப்பொருள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் பலர் பொலிசாருக்கு வழங்கி வருவதில் இருந்து இது புலனாகின்றது.

நாளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வூட்டக் கூடிய செயற்திட்டங்களை தயாரித்து நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இன்றைய தலைமுறையினருக்கு வழிகாட்ட வேண்டிய ஒரு சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இளம் சமுதாயத்தை பாதுகாப்பதற்கு அரசாங்கம், இராணுவத்தினர், பொலிஸ், குற்றத்தடுப்பு பிரிவு, போதை பாவனையை கட்டுப்படுத்துவதற்கான அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் என பல தரப்பினரும் பணியாற்றுகின்றனர். குறிப்பாக ஒவ்வொரு பிரதேசங்களிலும் சிவில் சமூக அமைப்புக்கள், பள்ளிவாசல்கள், சமூக நலன் விரும்பிகள் போன்றவர்களது ஒத்துழைப்பு மிக முக்கியமானதாகும்.

அண்மையில் நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர் போதைப்பொருள் பாவனையை சமூகத்திலிருந்து இல்லாமல் செய்வதற்கு சில தீர்மானங்களை நிறைவேற்றி பொதுமக்களுக்குஅறிவித்தனர். இதில் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களது ஜனாஸா நல்லடக்கம் மற்றும் சமூகநல செயல்பாடுகளிலிருந்து அவர்களை ஒதுக்கி வைப்பது என்றும், சம்பத்தப்பட்டவர்களது பெயர்களை பகிரங்கப்படுத்துவது என்றும் அறிவிக்கப்பட்டது. இது ஒரு சிறந்த முன்மாதிரியாக சமூக மட்டத்தில் பேசப்படுகின்றது.

அம்பாறை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் போதைப் பொருள் பாவனை ஊடுருவியுள்ளமை அவை தொடர்பான கைதுகளும் சமூக பிரச்சினைகளும் எடுத்துக் காட்டுகின்றன. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு சிவில் சமூக பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், உலமாக்கள், புத்திஜீவிகள் தங்களுடைய முழுமையான கவனத்தை செலுத்த வேண்டும். எதிர்கால சந்ததியைக் காப்பாற்ற வேண்டும் என்றால் போதைவஸ்து வியாபாரிகளை சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட வேண்டும். இவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு பொலிசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவரின் குடும்பமே சிதைந்து சீரழிந்து வருகிறது. குழந்தைகளுக்கு அன்பு, அரவணைப்பு மற்றும் வழிகாட்டுதல் கிடைக்காமல் அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடுகின்றது.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நடத்தை மீது ஆரம்பத்தில் இருந்தே உரிய கவனம் எடுப்பது அவசியம். அப்போதுதான் தீயபழக்கங்களை முளையிலேயே கிள்ளியெறிய முடியும்.

பிள்ளைகளின் கல்வி நாட்டம் குறையத் தொடங்குகின்றது எனில் அவர்களின் நண்பர்கள் வட்டாரத்தைக் கவனியுங்கள். உடல் நிலையில் ஏதேனும் மாற்றம் தென்படுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

செயல்பாடுகளிலோ அல்லது உரையாடல்களிலோ ஏதேனும் மாற்றம் தென்படுகிறதா என்பதை கவனியுங்கள். அவர்களுடைய தனிமை அறையில் யாரும் நுழைவதைத் தடுக்கிறார்களா? அடிக்கடி பணம் கேட்கிறார்களா? உண்மையான தேவைதானா? என்பதைக் கண்டறியுங்கள்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் பிரகாரம் இலங்கையில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போதைப் பொருளுக்கு நிரந்தரமாக அடிமையாகியுள்ளதாக தேசிய போதைத் தடுப்பு சபை எச்சரித்துள்ளது. கடந்த ஆண்டில் போதைப் பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட 29,790 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் 60% ஆனோர் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள், 39% ஆனோர் 20 வயதை நெருங்கியவர்களாவர். கடந்த ஒரு சில வருடங்களில் சிறுவர்களிடத்தில் குறைந்திருந்த போதைப்பொருள் பாவனை மீண்டும் நாட்டில் தலைதூக்கி வருவதாகவும் புகைத்தல் மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது.

போதைவஸ்துக்கு அடிமையானவர்கள் 50% திருமணமாகாத இளைஞர்களாவர். இவர்களில் பலர் பல்கலைக்கழகம், உயர்தர, சாதாரண தர மாணவர்களாவர். 45% திருமணமானவர்கள் என்று சுகாதார அமைச்சின் அறிக்கை குறிப்பிடுகிறது. முக்கியமாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் சிலவகை போதைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. சில பாடசாலை மாணவிகளும் இத்தீய பழக்கத்துக்கு உட்பட்டிருந்ததாக முன்னர் செய்திகள் வெளிவந்தன.

போதைக்கு அடிமையானவர்களை அப்பழக்கத்திலிருந்து மீட்க எத்தனையோ மருத்துவ முறைகள் இருக்கின்றன. போதைக்கு அடிமையானவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கி, மறுவாழ்வு அளிக்க வேண்டும். விற்பனையை தடை செய்தால் மட்டுமே இதனைத் தடுக்க முடியும். சமூகத்தில் சீர்திருத்தங்களைச் செய்வதற்கு நலன்விரும்பிகள் முன்வர வேண்டும்.

ஏ.எல்.எம்.ஷினாஸ்
(பெரியநீலாவணை விசேட நிருபர்)