பாரதியின் பெண் விடுதலைக்கான குரலின் ஆழமும் அர்த்தமும்

பாரதியின் பெண் விடுதலைக்கான குரலில் ஆழமும் அர்த்தமும் அதிகம். பெண் கல்வியின் முக்கியத்துவம் சுப்பிரமணிய பாரதியினால் உணரப்பட்டதனால் உலகத்திற்கும் உணர்த்தப்பட்டது. அவரது நினைவு நாளை அண்மையில் நினைவு கூர்ந்தோம். பாரதியின் இருப்பு இன்றைய சாதனைப் பெண்கள் ஒவ்வொருவரிலும் காணலாம்.

பாரதி பெண்தொழில், தொழில் உரிமை, சொத்துரிமை, பெண்கல்வி, மறுமணம், பால்ய விவாகம்,தேவதாசிமுறை என பெண்ணுக்கு எங்கெல்லாம் அநீதி இழைக்கப்பட்டதோ அதை அடிவேர்களிலிருந்து மாற்ற முற்பட்டார். பாரதி தனது குடும்பத்திலிருந்தே மாற்றங்களை ஏற்படுத்த தொடங்கியதே புரட்சியின் உன்னதமானது. தன்னோடு சரிசமமாய் நடைபோட தன் மனைவி செல்லம்மாளையும் தோள்மீது கைவைத்து அழைத்து சென்றவர்.

பாரதியின் கவிதைகள் மட்டுமல்ல அவரது ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் வீரியம் அதிகம். அவரது ‘சந்திரிகையின் கதை' எனும் கதையில் விசாலாட்சி எனும் கதாபாத்திரம் அப்போதைய வயது இருபத்தைந்து. ஆனால் பத்து வயதில் கன்னிப் பருவத்தில் விதவையான இளம்பெண் அவள். அவளது அண்ணன் மனைவியான கோமதி இறக்கும் தருவாயில் அவளிடம் சில கருத்துக்களை கூறுவதாக அமைந்த பகுதியில் பாரதி தனது சிந்தனைகளை ஏற்றியிருக்கிறார்.

"விசாலாட்சி! விசாலாட்சி! நான் இரண்டு நிமிஷங்களுக்கு மேல் உயிருடன் இருக்க மாட்டேன். என் பிராணன் போகு முன்னர் உன்னிடம் சில வார்த்தைகள் சொல்லிவிட்டுப் போகிறேன். அதை உன் பிராணன் உள்ள வரை மறந்து போகாதே! முதலாவது, நீ விவாகம் செய்துகொள்.ஆண்களும் பெண்களும் ஒருங்கே யமனுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறார்கள். ஆதலால், ஆண்களுக்குப் பெண்கள் அடிமைகளாய், ஆண்களுக்குப் பெண்கள் அஞ்சி ஜீவனுள்ள வரை வருந்தி வருந்தி மடிய வேண்டிய அவசியமில்லை. ஆதலால், நீ ஆண்மக்கள் எழுதி வைத்திருக்கும் நீசத்தனமான சுயநல சாஸ்திரத்தைக் கிழித்துக் கரியடுப்பிலே போட்டுவிட்டு, தைரியத்துடன் சென்னைப் பட்டணத்துக்குப் போய் அங்குக் கைம்பெண் விவாகத்துக்கு உதவி செய்யும் சபையாரைக் கண்டுபிடித்து, அவர்கள் மூலமாக நல்ல மாப்பிள்ளையைத் தேடி வாழ்க்கைப்படு. இரண்டாவது, நீயுள்ள வரை என் குழந்தையைக் காப்பாற்று. அதற்குச் 'சந்திரிகை' என்று பெயர் வை"

இப்படியாக நகரும் வரிகள் பாரதியின் விதவை மறுமணம் தவறல்ல, குழந்தை வயதில் திருமணத்தை நிகழ்த்தி கணவன் இறந்த பின்பு கைம்பெண்ணாய் துயர் அடைந்து தவிக்கும் பெண்குரலாய் அமைந்தது. விசாலாட்சியின் பயணத்தில் அவள் உடலை அடையவிரும்பும் ஆண்களே இருந்ததாகவும் அவளை மணம் செய்ய எவரும் முன்வரவில்லை எனவும், விசாலாட்சி கண்ணீர்வடிக்கையில் இந்த சமூகம் பெண்ணிற்கு இழைக்கின்ற அநீதியை புடம்போட்டு காட்டினான் பாரதி. பெண்களுக்கு எதிராகச் சுயநல உணர்வோடு ஆண் சமூகம் இயற்றி வைத்திருக்கும் சிந்தனைகளை சாடும் பாரதி இந்த நீசத்தனமான சுயநல சாஸ்திரம் பெண்களின் கற்பைச் சூறையாட நினைத்தும், அவர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயலும் தந்திரமான செயல்களையும் சாடுகின்றான். இதனை எண்ணும்போது பாரதியாரின் உள்ளத்தில் ஆத்திரமும் கோபமும் பொங்கி எழுகின்றன. அதனால் தான் அவன்

“நெஞ்சு பொறுக்குதல்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைக்கயில்..” என்றும் பாடினான்.

பாரதி தான் வாழ்ந்த காலத்தில் பெண் அடிமைத்தனத்தை உறுதிப்படுத்திய அத்தனை செயல்களிலும் கேள்வி எழுப்பினான். பெண்ணையும் சிந்திக்க வைத்தான். அதனால் தான் நாம் பாரதி கண்ட புதுமைப்பெண் என்கிறோம். அவன் வாழ்ந்த காலத்தில் இருந்த அத்தனை அழுத்தங்களையும் தாண்டி விருப்பமில்லாத விவாகம், குழந்தைத் திருமணம் இவற்றை அறவே மறுத்தார். விவாகத்திற்குப்பின் பெண் விரும்பினால் கணவனைவிட்டு விலகவும் அல்லது விவாகமே செய்யாமல், சுயமாகத் தொழில் செய்து கௌரவமாக வாழவும் பெண்களுக்கு உரிமை தர வேண்டும் என்கிறார். கணவனைத் தவிர வேறு ஆடவருடன் பேசக்கூடாது என்ற நிபந்தனையை ஒழிக்க வேண்டும் என்கிறார். பெண்களுக்கும் தந்தையர் வழிச்சொத்தில் சமபங்கும், உயர்கல்வி பயிலும் உரிமையும், அரசு அலுவலகப் பணிகளை ஏற்கும் உரிமையும் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார். இதனால் பெண் அவளை அடையாளம் காணமுடிந்தது. ஆணிலிருந்து அவள் வேறுபட்டவள் என்பது வெறும் உடலியல் மாற்றங்களே அன்றி மற்ற எல்லாவகையிலும் அவள் ஆணுக்கு சரிசமமானவள் என்பதனை பாரதி இன்றேல் பெண் உணர்ந்திருக்க இன்னும் நூற்றாண்டுகள் கடந்திருக்கும்.

பவதாரணி ராஜசிங்கம்