இந்தியர் நலன் பேணும் சவூதி தொண்டு நிறுவனங்கள்

சவூதி அராபியாவில் பணியாற்றிவரும் 25 இலட்சம் இந்தியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்தியப் பணியாளர்களினால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அரசு சார்பற்ற சேவா அமைப்புகள் பெருமளவில் உதவி வருவதாகவும் அதற்கான அங்கீகாரத்தையும் வசதிகளையும் தாம் உருவாக்கித் தந்திருப்பதாகவும் சவூதிக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

சவூதியில் பணியாற்றும் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளான சிறைவாசம், சம்பளம் வழங்கப்படாமை, மரணங்கள், மோசமாக நடத்தப்படுதல் போன்றவற்றை மிகக் குறைவான தூதரக உத்தியோகத்தர்களினால் மட்டும் கையாள்வது சாத்தியமாகாது என்பதால் ரியாத், ஜுபாய்ல், தமாம் ஆகிய தூதரகங்களில் இந்த அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சக இந்திய ஊழியர்களின் பிரச்சினைகளை இந்த நிறுவனங்கள் தொண்டு அடிப்படையில் தீர்த்து வைப்பதாக ரியாத் தூதரகம் தெரிவித்துள்ளது. ஜுபாயில் துணைத் தூதரகத்தில் சுமார் 40 தொண்டர்கள் 2014 முதல் பணியாற்றி வருகின்றனர்.

ஒரு நிறுவனம் 17 பேரை சிறையில் தள்ளியபோதும் மேலும் 91 ஊழியருக்கு ஒப்புக்கொண்ட சம்பளத்தை வழங்க மறுத்த போதும் இத் தொண்டர்கள் அவர்களுக்கு நிவாரணம் பெற்றுத்தந்தனர் என இந்தியத் தூதரகம் தன் செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.