அறையில் நாஜிக் கொடியை தொங்கவிட்டவர் பிடிபட்டார்

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தமது அறையில் நாஜி கொடி மற்றும் வரைபடம் ஒன்றை தொங்கவிட்டிருந்த ஆடவர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

3டி துப்பாக்கி ஒன்றை தயாரிக்க முயற்சித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஒரேஞ்ச் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட 26 வயதான இந்த இளைஞன் துப்பாக்கிச் சட்டத்தை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டு நேற்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சித்தாந்த ரீதியில் தூண்டப்பட்ட வன்முறை பயங்கரவாதத்தின் ஆதரவுடையவர் என்று குற்றம்சாட்டப்பட்ட இவர் துப்பாக்கி பொருட்களை இறக்குமதி செய்தது தொடர்பிலேயே பயங்கரவாத தடுப்பு பொலிஸார் அவரது வீட்டை சோதனை இட்டுள்ளனர்.

அவரது கைத்தொலைபேசி சோதனை செய்யப்பட்டபோது துப்பாக்கி ஒன்றை உருவாக்குவது பற்றிய டிஜிட்டல் வரைபடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க முடியுமான குற்றமாகும்.

இந்த இளைஞனின் முகவரிக்கு துப்பாக்கி கூறுகள் உள்ள பொதி ஒன்று வந்திருப்பதை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து இரண்டு வாரங்களுக்கு முன்னரே இது பற்றிய விசாரணை அரம்பிக்கப்பட்டது.