மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்று

இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி 20 போட்டியில், 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும் தென்னாபிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரினை 2-0 எனக் கைப்பற்றியிருக்கின்றது.

ரி 2−0 தொடரினை இலங்கை அணி இழந்த நிலையில், தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெறுகின்றது.

மூன்று போட்டிகள் கொண்ட ரி 20 தொடரின் முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணி 28 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்ற நிலையில், இலங்கை அணி கட்டாய வெற்றி ஒன்றுக்காக தொடரின் இரண்டாவது போட்டியில் (12) களமிறங்கியது.

கொழும்பு ஆர். பிரேமதாச அரங்கில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருந்தார்.

இந்தப் போட்டிக்கான இலங்கை அணி இரண்டு மாற்றங்கள் மேற்கொண்டிருந்தது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோவுக்குப் பதிலாக, அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா, உபாதையில் இருந்து மீண்டு அணிக்கு திரும்ப, கடந்த போட்டிகளில் பந்துவீச்சில் தடுமாற்றம் காண்பித்து வரும் சுழல் பந்துவீச்சாளர் அகில ஜனன்ஜயவுக்குப் பதிலாக இளம் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் பிரவீன் ஜயவிக்ரம இலங்கை அணிக்காக ரி 20 சர்வதேசப் போட்டிகளில் அறிமுகம் பெற்றிருந்தார்.

தென்னாபிரிக்க அணியில் அதிரடி துடுப்பாட்ட வீரர் டேவிட் மில்லர் உபாதைக்கு உள்ளாகியமையினால் அவரது இடத்திற்கு ரஸ்ஸி வென் டஸ்ஸன் உள்வாங்கப்பட்டிருந்தார்.

இலங்கை அணி

தசுன் ஷானக (தலைவர்), குசல் பெரேரா, தினேஷ் சந்திமால், பானுக்க ராஜபக்ஷ, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்க, வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மன்த சமீர, மஹீஷ் தீக்ஷன, பிரவீன் ஜயவிக்ரம

தென்னாபிரிக்க அணி

எய்டன் மர்க்ரம், குயின்டன் டி கொக், ரீசா ஹென்ரிக்ஸ், ட்வைன் ப்ரைடொரியஸ், ரஸ்ஸி வான் வென்டர் டஸன், ஹென்ரிச் கிலாசன், என்ட்ரிச் நோர்கியா, கேஷவ் மஹராஜ், காகிஸோ ரபாடா, ஜொர்ன் போர்டியுன், டப்ரைஷ் சம்ஷி

பின்னர் நாணய சுழற்சிக்கு அமைவாக முதலில் துடுப்பாடிய இலங்கை அணி தமது ஆரம்ப வீரரான தினேஷ் சந்திமாலின் விக்கெட்டினை 5 ஓட்டங்களுக்கு பறிகொடுத்த போதும், பானுக்க ராஜபக்ஷவின் அதிரடியினால் சிறந்த ஆரம்பம் பெற்றது.

எனினும் தொடர்ந்து தென்னாபிரிக்க அணி சுழற்பந்துவீச்சாளர்களால் தடுமாற்றம் கண்ட இலங்கை வீரர்கள் 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 103 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் குசல் பெரேரா 25 பந்துகளுக்கு 30 ஓட்டங்கள் எடுக்க, பானுக்க ராஜபக்ஷ 3 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 13 பந்துகளில் 20 ஓட்டங்களை எடுத்தார்.

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சு சார்பில் ரி 20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் உள்ள தப்ரைஸ் சம்ஷி மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்க்க ஜொர்ன் போர்டியுன் 2 விக்கெட்டுக்களை சுருட்டினார்

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 104 ஓட்டங்களை 20 ஓவர்களில் அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி, குறித்த வெற்றி இலக்கினை 14.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 105 ஓட்டங்களுடன் இலகுவான முறையில் அடைந்தது.

தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் வெற்றியினை உறுதி செய்த குயின்டன் டி கொக், ரி 20 போட்டிகளில் தன்னுடைய 10ஆவது அரைச்சதத்துடன் 48 பந்துகளில் 7 பௌண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் இருக்க, எய்டன் மார்க்ரமும் 21 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்திருந்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் வனிந்து ஹஸரங்க மாத்திரம் ஒரு விக்கெட்டினை சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. போட்டியின் ஆட்டநாயகனாக தென்னாபிரிக்க அணியின் தப்ரைஸ் சம்ஷி தெரிவாகினார்.