முதுமையில் ஏற்படுகின்ற உளத் தாக்கங்களை அகற்றி உள்ளத்தில் இளமையுடன் வாழ்வோம்!

முதுமைக் காலத்தில் பொதுவாக மனச்சோர்வு, மனப்பதற்றம், மனக்கவலை போன்ற நிலைகள் அநேகமானோருக்கு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இவற்றைத் தவிர்ப்பதற்கு மன ஆரோக்கியம் சிறப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டியது அவசியம். ஏனெனில் மனநலம் பாதித்தால் உடல் நலம் பாதிக்கும். எனவே மன ஆரோக்கியத்தைப் பேண இலகுவான வழிமுறைகளை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

முதலாவதாக தனிமை என்பதைத் தவிர்க்க வேண்டும். ஆய்வுகளின்படி தனிமையில் இருப்பவர்களுக்கு முதுமையின் தீவிர விளைவுகள் ஆறுமடங்கு அதிகமாக ஏற்படும் எனக் கூறப்படுகின்றது. எனவே நடுத்தர வயதிலிருந்தே அவரவர் மனவிருப்பத்திற்கேற்ப நல்ல பொழுதுபோக்குகள் ஒன்றையோ அல்லது பலவற்றையோ பழக்கப்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக வாசிப்பு, பாடல் கேட்டல், தையல், கைவினை வேலைகள், எழுத்தாக்கம், சமூக சேவை, சமய காரியங்கள் போன்றன.

கல்வியின் நிறைவு ஒழுக்கம் என்பர். அவ்வாறே திருவள்ளுவர் கூட 'ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்' என்று கூறியுள்ளார். எனவே தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களை தவிர்த்து, மற்றவர்களை நாவினாலோ அல்லது உடலாலோ துன்புறுத்துவதைத் தவிர்த்து, மற்றவர்களுடன் அளவளாவும் போதும், பொதுவிடயங்களில் பங்கேற்கும் போதும், எத்தகைய சூழ்நிலைகளிலும் பொறுமையை இயன்றவரை கடைப்பிடித்து 'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்' என்;பதற்கு இணங்க அன்புடன் வாழப்பழக வேண்டும்.

அடுத்ததாக மௌன விரதம். இது ஒரு சிறப்பான வழிபாட்டு முறையாகும். முதலில் 15-30 நிமிடங்கள் கடைப்பிடித்து பின்னர் தினமும் படிப்படியாக அதிகரித்து ஒரு மணி நேரம் வரை நீடிக்கலாம். இதனை தினமும் ஒழுங்காக கடைப்பிடித்து வர மகிழ்ச்சி, அமைதி, புத்துணர்வு போன்றவற்றை அனுபவிக்க முடியும். இப்பழக்கமானது முதுமைக்காலத்தில் மனஅமைதியை ஏற்படுத்த உதவும்.

மேலும் எளிய யோகப் பயிற்சிமுறைகளை உரியவர்களிடமிருந்து கற்று அவற்றை வாழ்வியலின் ஒரு அங்கமாக கடைப்பிடித்து வருதல் மூலம் மனம் மற்றும் உடல் நலத்தை பேணிப் பாதுகாக்கலாம். தன்னுள் எப்படி வாழ வேண்டுமென்ற வாழ்க்கையின் அர்த்தத்தை பொதிந்து வைத்திருக்கும் அறிவியலே யோகா எனப்படும். யோகத்தை முறையாகப் பயின்றால் உடல் இளமை பெறும் என்று திருமந்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வயதுக்கும், உடல்நிலைக்கும் ஏற்ற வகையிலான யோகப் பயிற்சிகளை தெரிவு செய்து பயிற்சி செய்தல் மிக முக்கியமானதாகும். நாளாந்தம் 5 - 10 நிமிடங்களாவது யோகாவைப் பயிற்சி செய்து வர இரத்த அழுத்தம் சீராகி, மனஅழுத்தம் குறையும்.

அடுத்ததாக மனஅமைதியை ஏற்படுத்த மனதை ஒருநிலைப்படுத்த வேண்டியது மிக அவசியமாகும். மனம் கட்டுக்கடங்காத எண்ணங்களைக் கொண்டிருக்கும் ஒரு பெரிய சுரங்கம். சிதறி ஓடும் எண்ணிலடங்காத எண்ணங்களை ஒருநிலைப்படுத்த தியானம் மிகவும் பயனுள்ளதாக அமையும். ஐம்புலன்களையும் அடக்கி தீய எண்ணங்களை வெளியேற்றி, உயர்ந்த எண்ணங்களை மனதில் நிரப்பி முறைப்படி தியான நெறியில் ஒழுகிவர மன அமைதி சிறப்பாக ஏற்பட்டு கோபம், பதற்றம் போன்ற நிலைகள் இயன்றளவு குறையும். இதனால் மனநலம் சீராகும். எவ்விதமான வேலைகளையும் இலகுவாக செயற்படுத்தக் கூடிய ஆற்றல் ஏற்படும். மனதைரியம் உண்டாகும்.

அடுத்ததாக மனஅமைதியை ஏற்படுத்த ‘பிராணாயாமம்’ எனும் பயிற்சியை தகுதியானவர்களிடமிருந்து முறையாகப் பயிற்சி பெற்று கடைப்பிடிக்கலாம். சுவாசமானது ஆழமானதாகவும் நீளமானதாகவும் இருக்க வேண்டும். அதற்குச் சிறந்த வழி பிராணாயாமம். இதனால் உடல் உறுப்புக்களில் பலம் ஏற்படும். ஆயுள் அதிகரிக்கும், வயதிற்குரிய பாதிப்புகள் குறைத்து இளமையாக இருத்தல் போன்றன ஏற்படும்.

முதுமையில் இயலாமை மிகவும் கொடியது. முதுமையில் வறுமை அதை விடக் கொடியது. அநேகமான மூத்த பிரஜைகள் சந்திக்கும் பிரச்சினைகளில் மிக முக்கியமான பிரச்சினை இயலாமை ஆகும். ஆகவே ஒவ்வொருவரும் தமது மனதை அதற்கு ஏற்ப தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நடுத்தர வயதிலிருந்தே மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டிய கட்டாய நிலையை தவிர்த்தல், சிறுவேலையாக இருப்பினும் யாருடைய துணையுமின்றி தாங்களாகவே செய்யப் பழக வேண்டும். புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களைத் தவிர்த்தல் வேண்டும். இது பணவிரயத்துடன், உடல்நலத்தையும், மனநலத்தையும் பாதிக்கும். முதுமைக் காலத்திற்காக சிறிதளவேனும் பணத்தை சேமித்து வைத்தல் வேண்டும். அதுவே பிற்காலத்தில் அவரவர் வாழ்க்கையை சிறப்பாக கழிக்க ஒரு ஊன்றுகோலாக உதவும்.

யோகப் பயிற்சியில் ஈடுபடமுடியாதவர்கள் தமது உடல் நிலைக்கு ஏற்ப சுற்றுப்புறச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தகுந்த உடற்பயிற்சியைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும். வேகமாக நடத்தல், சைக்கிள் ஓட்டுதல், நீந்துதல், வீட்டுக்குள்ளே விளையாடுதல் போன்றவற்றில் ஈடுபடலாம்.

வயதின் தாக்கங்களால் மனதில் ஏற்படும் தனிமை, பதற்றம், மனக்குறை போன்றவற்றை இல்லாதொழிக்க ஆன்மீக சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆன்மீக வழியில் மனதை செலுத்த வாழ்வில் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகள் சிறப்பாக ஏற்படும். ஆன்மீக வழி எதையும் செய்யக் கூடிய நம்பிக்கையைத் தருவதால் மனஅமைதி சிறப்பாக ஏற்படும். அதனால் மனச்சுமைகள் குறைவதுடன், அதிக தீய எண்ணங்கள் எம்மை விட்டு அகலும்.

முதுமைக் காலத்தில் நம்மைப் பற்றி மட்டுமே எண்ணி சுயநலமாக வாழாமல் மற்றவர்களுக்காகவும் வாழ வேண்டும் என்ற மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு உதவும் போது அவரவர் பிரச்சினைகள் தாமாகவே குறைந்து விடும். சிறிய உதவியாயினும் மனதாலும் உடலாலும் அர்ப்பணிப்புடன் சேவை செய்வதன் மூலம் மனத்திருப்தி கிடைக்கும். இது மன ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும்.

நவீன கால மாற்றத்திற்கேற்ப முதுமைக் காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய விடயமாக கைத்தொலைபேசிப் பாவனை கருதப்படுகின்றது. தற்போதைய காலத்தில் கைத்தொலைபேசி ஒரு வரம்தான். இது மறுக்க முடியாத உண்மையும் கூட. சகல விடயங்களையும் இலகுவாக நிறைவேற்ற உதவுகின்றது. தற்போதைய கொவிட்19 இடர்சூழ்நிலையில் கூட கல்விச் செயற்பாடுகள் அனைத்தும் தடையின்றி நிகழ, வியாபாரமாகட்டும், ஏனைய சேவைககளாகட்டும் சிறப்பாக நடைபெற மிக முக்கிய சாதனமாக கைத்தொலைபேசி காணப்பபடுகின்றது.

ஆனால் கைத்தொலைபேசி பாவனை அதிகரிக்க அதிகரிக்க மனிதனுடைய ஆயுள், ஆரோக்கியமும் குறைந்து செல்வதனையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆய்வுகளில் கூட அதிக கைத்தொலைபேசி பயன்பாடு காரணமாக புற்றுநோய் மற்றும் மூளைப்பாதிப்பு ஏற்படுகிறதா? என்னும் கருத்தை மையமாக வைத்தே விஞ்ஞானிகள் தமது ஆராய்ச்சியை முன்னெடுக்கிறார்கள்.

அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்களின் ஆராய்ச்சியில் முகநூல்களை பயன்படுத்துபவர்களில் 60 வீதமானவர்களில் முகநூல் தொடர்பிலான அதிக எதிர்மறையான அனுபவங்கள் ஏற்படுவதாகவும் அது கடும் மனஇறுக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகின்றது.

வைத்திய கலாநிதி
(செல்வி) வினோதா சண்முகராஜா,
(சிரேஷ்ட விரிவுரையாளர்,
சித்த மருத்துவ அலகு)
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்
கலாநிதி
(திருமதி) கௌரி ராஜ்குமார்,
(சிரேஷ்ட விரிவுரையாளர்,
தாவரவியல் துறை, விஞ்ஞான பீடம்)
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்