வாக்காளர்களுக்கு பல்வேறு வகையில் இலஞ்சம் கொடுத்த உறுப்பினர் பதவி இழப்பு

வாக்காளர்களுக்கு பல்வேறு வகையில் இலஞ்சம் கொடுத்த உறுப்பினர் பதவி இழப்பு-Bribe to the Voters-SLPP Moneragala PS Member Disqualified

- தேர்தல் வரலாற்றில் முக்கிய தீர்ப்பு; PAFFREL அமைப்பு வரவேற்பு

வாக்காளர்களுக்கு பல்வேறு வகையில் இலஞ்சம் கொடுத்தமை நிரூபிக்கப்பட்டதால், ஶ்ரீ.ல.பொ.பெ. கட்சியின் மொணராகலை பிரதேச சபை உறுப்பினர் டி.எம். ஹர்ஷக பிரிய திஸாநாயக்கவை பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய, மொணராகலை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்றையதினம் (13) மொணராகலை மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க குறித்த தீர்ப்பை வழங்கினார்.

கடந்த 2018 இல் இடம்பெற்ற மொணராகலை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்ட சக வேட்பாளரான ஹர்ஷக பிரிய திஸாநாயக்க என்பவர், வாக்காளர்களுக்கு பல்வேறு வழியில் இலஞ்சம் வழங்கியதால் தனது வெற்றி வாய்ப்பு தடுக்கப்பட்டுள்ளதாக, ஐ.தே.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வனசிங்க முதியன்சலாகே ஷாந்தவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பிலான வழக்கு விசாரணையின் தீர்ப்பே நேற்று வழங்கப்பட்டிருந்தது.

தோல்வியடைந்த வேட்பாளர், மற்றும் தேர்தல் வன்முறையை கண்காணிக்கும் மையத்துடன் (CMEV) இணைந்து PAFFREL அமைப்பு ஆகியன இவ்வழக்கை தாக்கல் செய்திருந்தது

ஹர்ஷக பிரிய திஸாநாயக்க தேர்தல் வேளையில் பொதுமக்களின் மின்சாரம், நீர் போன்ற கட்டணப் பட்டியல்களை செலுத்தியமை மற்றும் உலர் உணவுகளை பகிர்ந்தளித்தமை மாத்திரமல்லாது மதுபானங்களை வழங்கி, வாக்காளர்களை வாக்களிக்குமாறு தெரிவித்தமை நிரூபணமாகியுள்ளதாக நீதவான் அறிவித்தார்.

தகவல் அறியும் உரிமையின் அடிப்படையில் பெறப்பட்ட பல்வேறு ஆதாரங்கள் மற்றும் தங்களுக்கு இலஞ்சம் வழங்கப்பட்டதாக பல்வேறு சாட்சிகள் முன்வைத்த வாக்குமூலங்களின் அடிப்படையில் இவ்விடயம் நிரூபணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, தேர்தல் சட்ட திட்டங்களை மீறிய ஹர்ஷக பிரிய திஸாநாயக்க, குருணகால் பிரதேசசபை உறுப்பினர் பதவியில் இருப்பதற்கான தகுதியை இழந்துள்ளதாக நீதவான் அறிவித்ததோடு, அவரது பதவியை நீக்குமாறும் உத்தரவிட்டார்.

ஆயினும் குறித்த தீர்ப்பு தொடர்பில் மேன்முறையீடு செய்ய அவருக்கு 6 வாரங்கள் உள்ளதோடு, அவ்வாறு செய்யத் தவறும் நிலையில் அவர் தனது பதவியை உடனடியாக இழக்க நேரிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த தீர்ப்பு, தேர்தல் வரலாற்றில் மிக முக்கியமான தீர்ப்பு என, 'தேர்தல் கண்காணிப்பு அமைப்பான, சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு' அமைப்பு (PAFFREL) பாராட்டு தெரிவித்துள்ளது.

அத்துடன் வாக்காளர்களுக்கு இலஞ்சம் கொடுப்பது தொடர்பில் வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பானது, எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் இலஞ்சம் வழங்குவதை தடுக்கும் என்பதுடன், அதனையும் மீறி இலஞ்சம் வழங்குபவர்கள் தங்களது ஆசனத்தை இழக்க நேரிடும் என்பதை இத்தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளதாக, PAFFREL அமைப்பு தெரிவித்துள்ளது.

PDF File: