பிரபல வர்த்தகர் குலாம்ஹுஸைனின் கொலை தொடர்பில் 4 வருடங்களின் பின் மகன் கைது

பிரபல வர்த்தகர் குலாம்ஹுஸைனின் கொலை தொடர்பில் 4 வருடங்களின் பின் மகன் கைது-Businessmen Gulam Hussain Murder-His 37 Year-Old Youngerst Son Arrested After 4 Years

- இயற்கை மரணமென சித்தரிக்கப்பட்ட கொலை; விளக்கமறியல் விதிப்பு

பிரபல தேயிலை ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளரும் வர்த்தகருமான ஷபீர் அப்பாஸ் குலாம்ஹுஸைனின் மரணம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட அவரது இளைய மகனுக்கு செப்டெம்பர் 17ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் (11) குற்றப்புலனாய்வு பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நேற்று (12)  கோட்டை நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.

குறித்த கொலை இடம்பெற்று நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தேகநபரின் கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Adam Expo நிறுவனம் உள்ளிட்ட 9 நிறுவனங்களுக்குச் சொந்தமான 68 வயதான தொழிலதிபர் குலாம்ஹுஸைன், கடந்த 2017 ஜூன் 09ஆம் திகதி மரணமடைந்திருந்தார்.

அவரது அலுவலகத்தில் வைத்து இடம்பெற்ற அவரது மரணம் இயற்கையானது என அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவரது மரணம் தொடர்பில் எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 2018 ஓகஸ்ட் 16ஆம் திகதி CID யின் பொதுமக்கள் முறைப்பாடு பிரிவில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து அவரது உடல் கடந்த 2019 இல் தோண்டி எடுக்கப்பட்டு, விசேட சட்டவைத்தியர்கள் மூவரிடம் பிரேதப் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டது.

இதன்போது அவரது தாடை எலும்பிலும் உடலின் இடது பக்க விலா எலும்பொன்றிலும் வெடிப்பு இருந்தமை கண்டறியப்பட்டது.

அதற்கமைய அவரது மரணம் அவரது கழுத்து இறுக்கப்பட்டதனால் நிகழ்ந்துள்ளது என்றும் அது ஒரு கொலை என்றும் மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைக்குப் பின்னர், சிஐடியினர் அதுல் கோட்டை பிரதேசத்தில் வசிக்கும்  37 வயதான குறித்த வர்த்தகரின் இளைய மகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இக்கொலையானது மிகசூட்சுமமாக மேற்கொள்ளப்பட்டு, இயற்கையான மரணமாக காட்டும் வகையில் திட்டமிட்டு இறுதிக்கிரியைகளை மேற்கொண்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், மிக நுணுக்கமாக மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இது அவரது இளைய மகனான குறித்த சந்தேகநபரினால் மேற்கொள்ளப்பட்ட கொலையென புலனாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டுள்ளது.