விஜயவாடா ரயில் நிலையம் விற்பனைக்கு; ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விஜயவாடா ரயில் நிலையம் 133 ஆண்டுகள் பழமையானது. ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய ஏ-1 வகை ஜங்ஷன் இதுவாகும். தென்னிந்தியாவையும், வட இந்தியாவையும் இணைக்கும் மிகப்பெரிய ரயில்வே ஜங்ஷனாக இது விளங்குகிறது.

இந்த ரயில் நிலையத்தை குத்தகை அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயில் நிலையம் மட்டுமின்றி, விஜயவாடா ரயில்வே டிவிஷனில் உள்ள ரயில்வே சொத்துகள், சத்யநாராயணபுரம் ரயில்வே காலனி கூட தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஜயவாடா ரயில் நிலையம் முன்பு தென் மத்திய ரயில்வே (மஸ்தூர்) ஊழியர் சங்கத்தினர் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ரயில்வே சொத்துகளை தனியாரிடம் நீண்டகால குத்தகைக்கு விடுவது கிட்டத்தட்ட விற்பனைக்கு சமமாகும் என குற்றம் சாட்டினர். இதுபோல, குண்டுபல்லி ரயில்வே வேகன் தொழிற்சாலை முன்பும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விஜயவாடா ரயில் நிலையம் கடந்த 1888-ம் ஆண்டு கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.