தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். நாகாலாந்தின் ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவியைத் தமிழகத்தின் ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். தற்போது அவர் பஞ்சாப் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அசாமின் ஆளுநரான பேராசிரியர் ஜகதீஷ் முகி, நாகாலாந்தின் பொறுப்புகளையும் கூடுதலாக கவனிப்பார். ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரல் குர்மித் சிங் உத்தராகண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆர்.என்.ரவி

ஆர்.என்.ரவி என்கிற ஸ்ரீ ரவீந்திர நாராயண் ரவி பிஹாரில் உள்ள பாட்னாவில் பிறந்தவர். இயற்பியலில் முதுகலைப் பட்டம், சில காலம் பத்திரிகைத் துறை பணி என இருந்தவர் கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரி ஆகி 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றினார். பின்னர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றலாகி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார். உளவுத்துறையிலும் இவர் பணியாற்றியுள்ளார்.