நாட்டிலுள்ள 22 மில். மக்களை பாதுகாக்கவே அவசரகால சட்டம்

ஒருபோதும் தவறாக பயன்படுத்தமாட்டோம்

நாட்டின் நுகர்வோர் மற்றும் 22 மில்லியன் மக்களை பாதுகாக்கவே அவசரகாலச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.. இச்சட்டத்தை வேறு எதற்காகவும் அரசாங்கம் பயன்படுத்தாதென உறுதியாக கூறுகிறோமென விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். சர்வதேச ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை போன்று நாட்டில் எவ்வித உணவுத் தட்டுப்பாடும் இல்லை. மாறாக இங்கு உணவு மாபியாவே உள்ளதென்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை அவசரகாலச் சட்டத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

நாட்டின் பொது மக்கள் தமக்கு அவசரகாலச் சட்டம் அவசியமில்லையென தீர்மானித்தால் பாராளுமன்றத்தில் இந்தச் சட்டத்தை நிறைவேற்றாதிருக்க முடியும். நாட்டில் உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோரை பாதுகாக்கவே ஜனாதிபதி அவசரகாலச் சட்டத்தை வர்த்தமானியில் பிரகடனப்படுத்தியிருந்தார். நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்படுவது இது முதல் முறையல்ல. நாட்டு மக்களின் நலன்களுக்காக ஜனாதிபதிக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்த முடியும்.

அல்ஜசீரா, பி.பி.சி மற்றும் பல்வேறு சர்வதேச ஊடகங்கள், இலங்கையில் உணவுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளதாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. சதொசவில் வரிசையில் நிற்கும் சிலரை காண்பித்து இவ்வாறான செய்திகளை வெளியிடுகின்றனர். எமது நாட்டில் உணவுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லையென அவர்களுக்கு தெளிவாக கூறுகிறோம். ஆனால், இங்கு உணவு மாபியா ஒன்றுள்ளது. உணவு மாபியாவை கட்டுப்படுத்ததான் ஜனாதிபதி அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளார்.

ஓர் அரசாங்கமாக என்ற ரீதியில் நாட்டு மக்களுக்குத் தேவையான உணவை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதிக்கு பொறுப்புள்ளது.3.2 மெட்ரிக்தொன் அரிசி எம்மிடம் உள்ளது. அதனால் நாட்டில் அரிசிக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை என்பதால் மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. நாட்டில் மரக்கறி மற்றும் அரசிக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை.

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் ஆளை உரிமையாளர்களுக்கு 2500 ரூபாதான் தண்டப்பணம் விதிக்கப்படுகிறது. இதனை ஒரு இலட்சம் முதல் 20 இலட்சம் வரை உயர்த்துவதற்கான நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதனை விரைவில் நிறைவேற்றி தருமாறு கோருகிறோம். ஆறுமாதங்கள் வரை சிறையிலும் அடைக்க முடியும்.சட்டங்களை நிறைவேற்ற குறைந்தது மூன்று மாதங்களாவது செல்லும். அவ்வாறெனின் இந்த போகம் முடிந்துவிடும்.

நாட்டின் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை ஒரு சிலரால் நிர்ணயிக்க முடியுமாயின் ஏன் அரசாங்கமொன்று உள்ளது. ஆகவே, நுகர்வோரின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே அவசரகாலச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...