இரு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்வதே உயிராபத்தைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி!

‘அனைவருக்குமே தடுப்பூசி செலுத்தி விட்டால் மரணங்களை  கட்டுப்படுத்தி விடலாம்; அனைத்து தடுப்பூசிகளுமே ஒன்றுதான்’ என்கிறார் வைரஸ் ஆராய்ச்சியாளர் (Virologist) பேராசிரியர் மலிக் பீரிஸ்

கொவிட் காரணமாக மரணித்தவர்களில் இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தியோர் 3 சதவீதமானவர்களேயாவர். எனவே, கொவிட் மரணங்களைத் தடுப்பதற்கு இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்வதே ஒரே வழி என ஹொங்கொங்கில் வசிக்கும் வைரஸ் ஆராய்ச்சியாளர்(Virologist) பேராசிரியர் மலிக் பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கையில் கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்குப் பொருத்தமான கட்டுப்பாட்டு வழிமுறைகள் தொடர்பாக ஆராயும் SMART LOCKDOWN, Need of the Hour என்ற தலைப்பிலான மெய்நிகர் கலந்துரையாடலின் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

ICCSL என்கின்ற சர்வதேச வணிகர் அமைப்பின் இலங்கைக் கிளையினரால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்த மெய்நிகர் கலந்துரையாடலில், மருத்துவத்துறை விற்பன்னர்களுடன், வர்த்தக முன்னோடிகள், சுற்றுலாத்துறை சார்ந்தோர் உள்ளிட்டவர்களுடன் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்தார். இந்தக் கலந்துரையாடலில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இலங்கையில் கொவிட் காரணமாக மரணிப்போரில் 83 சதவீதமானவர்கள் 50 - 80 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், எனவே, இந்த வயதுப் பிரிவினர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டால் கொவிட் மரணங்களை பெருமளவு கட்டுப்படுத்தி விடலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

தற்போது இந்த வயதுப் பிரிவினர் பலரும் தடுப்பூசி செலுத்தாமல் இருந்து வருகின்றனர் என்பதை அண்மைய கொவிட் மரணங்கள் எடுத்துக் காட்டுவதாகக் குறிப்பிட்ட அவர், இதற்கான காரணத்தை ஆராய்ந்து இந்த வயதுப் பிரிவினருக்கு தவறாமல் இரண்டு தடுப்பூசிகளையும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

“உங்கள் அபிப்பிராயப்படி எந்தத் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வது நல்லது” என்று அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், “எந்தத் தடுப்பூசி உங்களுக்குக் கிடைக்கிறதோ, அந்தத் தடுப்பூசியே நல்லது” என்று அவர் பதிலளித்தார்.

“எல்லாத் தடுப்பூசிகளுமே ஒரே விதமான தொழில்நுட்பத்தையே கையாள்கின்றன” என்று சுட்டிக் காட்டிய அவர், “எந்தத் தடுப்பூசி சிறந்தது என்று ஆய்வு செய்து காலத்தை வீணடிக்காமல், கிடைக்கின்ற தடுப்பூசியைப் பெற்று உயிராபத்தைத் தவிர்த்துக் கொள்ள அனைவரும் முற்பட வேண்டும்” என்று வலியுறுத்திக் கூறினார்.


Add new comment

Or log in with...