ஒருபுறம் அமெரிக்கா, மறுபுறம் சீனா; இரு வல்லரசுகளுக்குமே நட்புமுகம் காண்பிக்க முயலும் பாகிஸ்தான்!

பாகிஸ்தானின் வெளிவிவகாரக் கொள்கைகள் சில சமயம் புரிந்து கொள்ள முடியாதவையாக அமைந்து விடுகின்றன. அந்நாடு அமெரிக்காவின் நேசநாட்டு பட்டியலிலும் இருக்கும் அதேசமயம் அமெரிக்காவின் எதிரியான சீனாவுடன் நெருங்கி உறவாடவும் செய்கிறது.

தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், சில சமயம் தன் மண்ணிலேயே நாசகார வேலைகளில் ஈடுபடுவதாகவும் விளங்கக் கூடிய அயலக பயங்கரவாத இயக்கங்களை அந்நாடு போஷிக்கிறது. அவை தமது மண்ணில் இருந்து தன் நண்பனான அமெரிக்காவுக்கு எதிராக செயல்படவும் அனுமதிக்கிறது.

9/11 சூத்திரதாரியை உலகெங்கும் அமெரிக்கா தேடி வர, அவர் தமது மண்ணில்தான் பதுங்கி இருக்கிறார் என்பதை பாகிஸ்தான் ஒப்புக் கொள்ளவே இல்லை. அவரை அமெரிக்க அதிரடியாக வேட்டையாடும் வரை!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முல்லா ஒமர் தலைமையில் ஆட்சி செய்து வந்த போது, அமெரிக்கா ஆப்கான் விவகாரத்தில் தலையிடவில்லை. இரட்டைக் கோபுர தாக்குதலின் பின்னர் பின்லேடன் ஆப்கானில் மறைந்துள்ளார் என்பது தெரியவந்ததுமே அமெரிக்கத் தலையீடு ஆப்கானிஸ்தானில் ஆரம்பமானது.

பாகிஸ்தானை எடுத்துக் கொண்டால், ஏனோ தெரியவில்லை, பயங்கரவாதத்தின் விளைநிலமாக தன் மண்ணைப் பயன்படுத்திக் கொள்ள அது அனுமதித்து வரும் அதேசமயம், மேற்குலகுக்கு மற்றொரு முகத்தைக் காட்டவும் ஜனநாயக மாண்மியம் பற்றிப் பேசவும் முனைகிறது. தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் இராணுவ வெற்றி பெறுவதற்கு பின்னணியில் இருந்தது பாகிஸ்தான் என்பது தெரிந்த விடயம்.

அமெரிக்கா சார்பாக சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்போரிடம் ‘சமாதான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம்' என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டே, அமெரிக்கா ஆப்கானை விட்டு வெளியேறியதும் அந்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்ற எல்லா வகையிலும் தலிபான்களுக்கு உதவி வந்ததும் அதே பாகிஸ்தான்தான்.

இன்னும் சொல்வதானால் பாகிஸ்தான் மண்ணில்தான் அமெரிக்கா 'ட்ரோன்' தாக்குதல்கள் நிகழ்த்தி பல அல்கைதா மற்றும் தலிபான் தலைவர்களை மண்ணில் சாய்த்தது. பலூசிஸ்தான் மாகாணத்தில் நடத்தப்பட்ட 'ட்ரோன்' தாக்குதலில்தான் தலிபானின் இரண்டாவது அமீரான முல்லா அக்தர் மன்சூர் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் பல பாகங்களில் இடம்பெறும் பயங்கரவாதத் தாக்குதல்களை எடுத்துக் கொண்டால் அவற்றின் வேர்கள் பாகிஸ்தானில் பதிந்திருப்பதைக் காண முடியும். லக்ஷர் ஈ தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகள் அந்த மண்ணில் இருந்தே செயற்படுகின்றன. 2008 மும்பை தாக்குதலின் பின்னணியில் இருந்தது இப்பயங்கரவாத அமைப்பே. இத் தாக்குதலில் ஆறு அமெரிக்கப் பிரஜைகள் மாண்டனர். 9/11 தாக்குதலின் பிதாமகன்களில் ஒருவரான காலித் ஷேக் முஹம்மத் கைது செய்யப்பட்டது பாகிஸ்தான் மண்ணிலேயே. இவர் பாகிஸ்தான் வம்சாவளியாவார்.

பாகிஸ்தானுக்கு இப்படியொரு பின்னணி இருந்தும் கூட, 9/11 தாக்குதலின் பின்னர் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஏறத்தாழ 23 பில்லியன் டொலர்களை வழங்கியிருக்கிறது. எனினும் தலிபான்களுக்கான ஆதரவை பாக். விலக்கிக் கொள்ளவில்லை. பாகிஸ்தானின் குவேட்டா, கராச்சி மற்றும் பேஷாவார் ஆகிய இடங்களில் தலிபான்கள் வசிக்க பாகிஸ்தான் வசதி செய்து கொடுத்திருந்தது. இங்கிருந்தபடி இவர்கள் செய்ததெல்லாம் அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தியதேயாகும்.

ஈரான், லிபியா, வடகொரியா ஆகிய நாடுகள் அணுவாயுத தயாரிப்பு தொழில்நுட்பத்தை பெற்றுக் கொண்டது பாகிஸ்தானில் இருந்தே. இதை அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை. அமெரிக்காவுக்கு எதிரான சக்திகள் பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டாலும் அந்நாட்டை அமெரிக்கா தன் கூட்டாளியாகக் கருதுவது விந்தையே.

அரபிக் கடல் மற்றும் பாரசீக்குடாவில் சீனக் கப்பல்கள் சஞ்சரிக்க பாகிஸ்தான் உதவுவதன் மூலம் அமெரிக்காவின் இந்தோ - பசிபிக் மூலோபாயத்துக்கு வேட்டு வைக்கவே பாகிஸ்தான் முயல்கிறது.

பாகிஸ்தான் தொடர்பான அமெரிக்கக் கொள்கை தோல்வியடைந்துள்ள நிலையில், அமெரிக்க இராணுவ தொழில்நுட்பங்கள் பாகிஸ்தான் வழியாக சீனா சென்றடைவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. அமெரிக்காவின் CENTCOM இராணுவ அமைப்பின் உறுப்பினர் என்ற வகையில் அமெரிக்க இராணுவ பயிற்சி மற்றும் இராணுவ தளபாடங்கள் தொடர்பிலான அறிவு பாகிஸ்தானுக்கு உண்டு. சீன சார்பு நாடு என்ற வகையில் இது அமெரிக்க இராணுவ நலன்களுக்கு உகந்தது அல்ல.

பாகிஸ்தானின் விசேஷம் என்னவென்றால், அது சீனாவின் நட்பு நாடாக இருக்கும் அதேசமயம், அமெரிக்காவின் நட்பு நாடாகக் காட்டிக் கொள்ளவும் செய்வதால் நேட்டோவின் பிரதான ஆதரவு நாடாகவும் அதனால் விளங்க முடிகிறது என்பதுதான்.

சீனாவில் இப்போது ஒரு இலட்சம் பாகிஸ்தான் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். 60 பில்லியன் அமெரிக்க டொலர்களை பாகிஸ்தானில் சீனா முதலீடு செய்துள்ளது. பாகிஸ்தானின் உளவுத் துறையினருக்கு சீனா பயிற்சி வழங்கி வரும் அதேசமயம், சீன மக்கள் விடுதலை இராணுவத்துடன் பாகிஸ்தான் இராணுவம் நெருங்கி செயல்படவும் செய்கிறது.

இதேசமயம் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் 7939 பாகிஸ்தான் மாணவர்களே கல்வி கற்று வருகின்றனர். அமெரிக்க - பாக். இரு தரப்பு வர்த்தகம் 6.6 பில்லியன் டொலர்களாகவே உள்ளது என்பது கவனிக்கத்தக்கது என்பதை இந்திய அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அவர்களது பார்வையில் இந்திய உளவியலின் கலப்பும் இருக்குமென்றாலும் முன்னர் லிபியா செய்ததைப் போல வெளியக பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்தும் அடைக்கலமும் போஷணையும் அளித்து வரும் பட்சத்தில் இதன் பின்விளைவுகள் பாரதூரமானவையாகவும் அந்நாட்டுக்கே - வளர்த்த கடா மார்பில் பாய்ந்த மாதிரி எதிராகத் திரும்பக் கூடிய வாய்ப்புகள் இருப்பதையும் மறந்து விடலாகாது.

சீனாவின் பக்கம் சாய்ந்து கொண்டே அமெரிக்காவின் கூட்டாளியாகவும் இருக்க முயலும் பாகிஸ்தானின் நகர்வுகளை இராஜதந்திரம் என்று வகைப்படுத்த முடியும். அது எவ்வளவு தூரம் செல்லுபடியாகும் என்பது அந்நாட்டின் மேலதிக நகர்வுகளைப் பொறுத்தது. ஆனால் பயங்கரவாதத்துக்கும் தமது மண்ணில் இருந்து செயல்படுவதற்கும் இடமளிப்பது என்பது அனைத்து நாடுகளின் கரிசனைக்கு உட்பட்டது என்பதால், அந்நாட்டின் பிரதான கூட்டாளிகளில் ஒன்று என்ற வகையில் அமெரிக்கா மிகுந்த அக்கறை கொள்ள வேண்டியது அவசியம். அந்நாட்டை இது தொடர்பாக எச்சரிக்கும், தீவிரவாத விளைநிலமாக அந்நாடு தொடர்வதைத் தடுக்கக் கூடிய பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பும் தகுதியும் அமெரிக்காவுக்கே உள்ளது. பிராந்திய நாடுகளும் இதையே விரும்புகின்றன.


There is 1 Comment

Add new comment

Or log in with...