சதொச, கூட்டுறவு விற்பனை நிலையங்களில் செப். 01 முதல் ரூ. 130 இற்கு சிவப்பு சீனி

சதொச, கூட்டுறவு விற்பனை நிலையங்களில் செப்டெம்பர் 01 முதல் ரூ. 130 இற்கு சிவப்பு சீனி-Brown Sugar Rs 130 From Sathosa From September 01

- வெள்ளைச் சீனி விலை குறைப்பு தொடர்பில் இரகசிய நடவடிக்கை

சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் புதன்கிழமை (01) சிவப்பு சீனி ஒரு கிலோ ரூ. 130 இற்கு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், லசந்த அலகியவன்ன இதனை தெரிவித்தார்.

இன்றையதினம் (29) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் அனைத்து பொருட்களினதும் விலைகள் அநியாயமான முறையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சீனி, அரிசி உள்ளிட்ட பொருட்கள் இதில் பிரதான இடத்தை வகிப்பதாக சுட்டிக்காட்டினார். உலக சந்தையில் விலை உயர்வு, டொலரின் விலை அதிகரிப்பு ஆகிய காரணங்களை இதற்காக தெரிவிக்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.

எனவே இவ்வாறு மேற்கொள்ளப்படும் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் வகையில் எதிர்வரும் செப்டெம்பர் 01ஆம் திகதி புதன்கிழமை முதல், சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில், சிவப்பு சீனி கிலோவொன்று உச்சபட்சம் ரூ. 130 இற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், எதிர்வரும் நாட்களில் வெள்ளைச் சீனியின் விலை குறைவடைவதற்கான நிலைமையை உருவாக்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நடவடிக்கைகள் தொடர்பில் தற்போது அறிவித்தால், வர்த்தகர்களை மீறி அந்நடவடிக்கைகளை மேற்கொண்டு அதில் வெற்றி கொள்ள வாய்ப்பு கிடைக்காது என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.


Add new comment

Or log in with...