அவன்கள் வாழும் இதே உலகில் அவள்களும் வாழ அங்கீகாரமுடையவர்கள்

- இன்னும் இந்த சினி உலகம் பெண்களை கவர்ச்சியின் பொருட்டே பயன்படுத்தி வருகின்றது

திரைப்படங்களின் வெற்றி தோல்வி என்பதெல்லாம் அப்படத்தின் நாயகனை மையப்படுத்தியதாகவே அமைகின்றது. கதாநாயகிகள் திரையில் தொட்டுக்கொள்வதற்காக பயன்படுத்தப்படும் ஊறுகாயைப்போல கதாநாயகனோடு வலம் வரவும், பாட்டுபாடவும் அவரை உற்சாகப்படுத்தவும் மட்டுமே வந்துகொண்டிருக்கிறார்கள்.

இவற்றைதாண்டி ஆங்காங்கே பெண்ணை முதன்மையாக கொண்ட திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும் அவை தமக்கான இடத்தை தக்கவைப்பதில் ஆண் சினிமா உலகில் தத்தளிக்கின்றது எனலாம். ஆரம்பகாலத்தில் இரசிகத்தன்மை பெரும்பாலும் ஆண்வயப்பட்டு இருந்தது. அதாவது அவர்களே திரைப்படங்களை பார்க்க கூடிய பெரும்பான்மையான இடத்தில் இருந்தனர். அதனால் அவர்கள் பார்வையில் ரசிக்க கூடியதாக பெண்ணை உருவகப்படுத்த சினிமா உலகம் கவர்ச்சி எனும் ஆயுதத்துடன் நடமாடுபவளாகவே பெண்ணை பயன்படுத்திக் கொண்டது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் ரசிகமனப்பான்மை சற்று வேறுபட்டுள்ளது. அதாவது ஆண், பெண், குழந்தைகள், பெரியவர் என பலதரப்பட்ட மக்களும் திரைப்படங்களை பார்கின்றனர். ரசனையும் வேறுபடுகின்றது.

இந்த நிலையில் பெண்களை கவர்ச்சிப் பொருளாக மட்டும் அவர்கள் தேடவில்லை. அதனை தாண்டி பெண் தொடர்பான ஆழ்மன நிலைகள் மற்றும் அவளது மன உறுதி , வலிமை, சாதிக்க துடிக்கும் நோக்கம் போன்ற பலதரப்பட்ட நிலைகளும் உள்வாங்கப்பட வேண்டும் என்றே நினைக்கின்றனர். ஆனாலும் இன்னும் இந்த சினி உலகம் அவர்களை கவர்ச்சியின் பொருட்டே பயன்படுத்தி வருகின்றது. சில திரைப்படங்களில் பாடல் காட்சிகளுக்காக மட்டுமே கதாநாயகிகள் வந்து போயிருப்பதனை காணலாம்.

பொதுவாகத் திரைப்படங்கள் பெண்களைத் தாயாகவும் தெய்வமாகவும் கொண்டாடுகிற மாதிரி மாயையை உருவாக்கினாலும் பெரும்பாலான படங்களில் பெண்கள் கீழ்த்தரமாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். தாயை தியாகியாகவும் மனைவியை தெய்வமாகவும் படைக்கின்றனரே ஒழிய அவளை பெண்ணாய் அவளை அறிந்து வெளிப்படுத்துவதில்லை.

ஆண்கள் அவர்களுக்கு பிடித்தமான ஆடையை அதாவது சூழலுக்கு ஏற்ற, தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு உடை அணிந்துக் கொள்ளலாம். ஆனால் பெண்கள் எப்போதுமே, எல்லா பாகங்களையும் இழுத்துப் போர்த்திக் கொண்டுதான் உடை அணிய வேண்டும்.

இது ஒருவகை குடும்பப் பெண் கலாசாரம். இன்னுமொன்று பாடல்காட்சிகளில் அல்லது கதாநாயகன் அவர்களை கனவில் சிந்திக்கும் போது ஆடைக்குறைப்பு அளப்பரியதாய் இருக்கும். இந்த வேறுபாடு முறையானதாக அமையாது.

பெண் அடிமைத்தனத்தை ஆதரிப்பது மட்டுமல்ல பெண்களைத் கொச்சைப்படுத்தும் சொல்லாடல்களையும் விதம் விதமாகவும் காட்சியமைப்புகளைத் தமிழ் சினிமா தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே வருகிறது. சில நகைச்சுவை நடிகர்கள் பெண்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக இரட்டை அர்த்த வசனங்களைப் பேசுவதும், பெண்களை இழிவுபடுத்துவதும் நடந்து வருகிறது.

பெண்களுக்கான முக்கியத்துவத்தை உணர்த்திடும் வகையில் பெண் கதாநாயகிகளைத் துணிச்சல் மிக்க கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து பெண்களுக்கான பங்களிப்பையும் அவர்களுக்கான நடிப்பின் அளவுகோலையும் அதிகரித்ததுடன் அவர்களுக்குரிய வாழ்வியல் உரிமைகளையும் திரைப்படங்களில் எடுத்துக்காட்டி அதிகரிக்கச் செய்த இயக்குநர்களில் கே. பாலச்சந்தரைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். கருப்பு வெள்ளைக் காலம் தொட்டு வண்ணங்களில் மிளிர்ந்த திரைக்காலம் வரை இவரது கதாநாயகிகள் மிடுக்கான தோற்றத்துடன் தலைநிமிர்ந்து கதாநாயகர்களை எதிர்கொள்ளும் பெண்களுக்கான புதிய பார்வையைத் தோற்றுவித்திருந்தனர். தற்போது இயக்குனர் ரஞ்சித்தின் அணுகுமுறை மற்றைய இயக்குனர்களை காட்டிலும் பெண்களை சிறப்பாக சித்திரிப்பதாக அமைந்துள்ளது எனலாம்.

பாலசந்தருக்கு பின் பாரதிராஜா தனது பங்களிப்பாகத் தமிழ்த் திரையுலகிற்கு வழங்கிய பல திரைப்படங்கள் பெண்களை அவர்களுக்கான சுயமரியாதையை மீட்டுவதாக அமைந்தன. எல்லாத்திரைப்படங்களும் அவ்வாறே அமைந்தன என்பதனை கூறமுடியாது. இவரது முக்கியத் திரைப்படமாக புதுமைப்பெண்ணைக் கூறலாம். அந்தத் திரைப்படத்தினைப் பாராட்டி தமிழக அரசு வரிவிலக்கு அளித்ததுடன், விருதுகளையும் வழங்கிக் கெளரவித்தது.

ஒருபெண் சிறையிலிருக்கும் தனது கணவனை மீட்க போராடி மீட்கிறாள். வீடு திரும்பியவன் குடும்பத்தவரின் பேச்சுக்களை கேட்டு அவள் மீது சந்தேகம் கொள்கிறான்.

இதனால் முதலில் கலங்கிய அவள் பின்னர் சீதையைப்போல் தீக்குளிக்க முடியாது. உன்தாயும் உனது தந்தையை இழந்த பின் தனியே இருந்து உன்னை வளர்த்தாளே அவளது நடத்தையில் சந்தேகம் கொள்ளாத நீ என்னை ஏன்கேட்கிறாய் என சீறி அவனை உதறி வெளியேறுகின்றாள்.

இன்றைக்கு சில திரைப்படங்களில் பாடல்களை பாருங்களேன். உதாரணமாக “why this kolaveri ..”இந்த பாடல் காதலியை திட்டி காதலன் பாடுகின்றார். ஆனால் மறுநாளே அவன்தான் வேண்டும் என்று சகலரையும் விட்டு அவள் வருகின்றாள். அந்த இடத்தில் கதாநாயகன்தான் சற்று தடுமாறுகின்றார். கதாநாயகி தெளிவாகவே இருந்தாள். அப்படியிருக்க பெண்களை இழிவுபடுத்தி அப்படியொரு பாடல் ஏன் வைக்க வேண்டும்.

இவையெல்லாம் போகட்டும் கண்ணகி திரைப்படத்தில் நயன்தாரா நடிக்க கூடாதாம். ஏன் அவர் தனக்கு பிடித்த ஒருவருடன் வாழ்கின்றார்.

ஒரே நேரத்தில் அப்படி வாழ்ந்து யாரையும் ஏமாற்றவில்லை. நாம் அவற்றை ஆராயவும் தேவையில்லை. அது அவரது தனிப்பட்ட வாழ்க்கை. கண்ணகி கதாபாத்திரம் கோவலன் என்பவனை காப்பற்றிய கற்புக்கரசியாக மாறியது எப்படி.

தன்னை விட்டு இன்னுமொருவளுடன் சென்ற கோவலன் திருந்திவர அவனை ஏற்று அவன் பழிசுமந்தபோது அவனை காத்தாள்.

அந்த கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவுக்கு ஏன் தகுதி பார்க்கிறோம். கோவலன் திருந்திவர ஏற்றவள் கண்ணகி. அப்படியென்றால் இங்கே கோவலனை நாம் பழிக்க மறந்துவிட்டோமா? அங்குதான் நாம் பெண் அடிமை சிந்தனைகளை கொண்டிருக்கிறோம்.

பெண்மட்டும் தன் மனதுக்கு பிடித்த ஒருவனை , அவன் விலகினாலும் அவனை மறக்காமல் அவன் நினைவாகவே வாழவேண்டும் என்றுதான் எண்ணுகின்றோம். நமது எண்ணங்களிலிருந்து மாற்றம் வராதவரை படைப்புக்கள் மீளவும் இந்த சுழலுக்குள்தான் சுற்றிக்கொண்டிருக்கும்.

பவதாரணி ராஜசிங்கம்


Add new comment

Or log in with...