கற்பனை கதைகளில் பெண்மையை இழிவுபடுத்தும் இரண்டடி பொதுமறை

எக்காலத்திற்கும் ஏற்புடைய நூலாக வரையறுக்கப்பட்டுள்ள திருக்குறளில் இரண்டு இரண்டு அடிகளுக்குள் அந்தக்காலத்தில் வாழ்ந்த மக்கள் வாழவேண்டிய வரைமுறைகளை வகுத்திருக்கின்றது. இது இந்தக்காலத்திற்கும் ஏற்புடையதாக அமைத்திருக்கின்றதா?இல்லை பெண் இதன்வழி ஒடுக்கப்பட்டிருக்கிறாளா? என்பதனை நாம் ஆராயவேண்டும்.

திருக்குறளில் ஆண்களுக்கு சில ஒழுக்கங்கள் வரையறுக்கப்பட்டிருந்தாலும் அவை பொதுவிலும் பேணப்படுவதாகவும் பெண்ணுக்கு இயற்றப்பட்ட விதிமுறைகள் அவளை ஒடுக்குவதாகவுமே அமைந்துள்ளன.

'தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய் எனப் பெய்யும் மழை'

இறைவனை வழிபடாது கணவனைத் தொழும் பெண்ணானவள் மழை பெய் எனக் கூறினால் உடனே மழை பெய்யும் என்று கடவுளை கூட இரண்டாம் பட்சம் என உரைத்து கணவனை பணிவது கற்புடைய பெண்ணிற்கு உரியதாக கூறப்படுகின்றது. அங்கே அவளது திறமையை காட்டிலும் அவள் கணவனை தொழுதமையின் பலனே இது என ஆணில் அந்த வெற்றியும் மறைமுகமாக ஏற்றப்பட்டுவிட்டது.

இங்கு இன்னுமொரு சூட்சுமம் உண்டு. சாதாரணமாக மழை பெய் என சொல்லி பாருங்களேன். பெய்துவிடுமா? யாதார்த்தத்தில் இது ஏற்புடையதா? அப்படியானல் பெண்களில் யாருமே கற்புடையவராக இருக்கமுடியாது.

'சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர்

நிறைகாக்குங் காப்பே தலை”

பெண்ணை சிறைசெய்து செய்வதல்ல காவல். அவளது கற்பினை காவல் செய்வதே காவல் எனப்படுகின்றது. இந்த அடிப்படையில் தான் ஆபிரிக்காவில் பெண்ணின் பிறப்புறுப்பு திருமணம் வரை தைத்துவிடப்படுகின்றதா? இது தவறு என்று உங்களுக்கு தோன்றாதவிடத்து குறளிலும் பெண்ணடிமைதனத்தை காணமுடியாது.

'மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

எனைமாட்சித் தாயினும் இல்'

குடும்பத்தை ஆளும் பண்புகள் இல்லாதவிடத்து

எவ்வளவு செல்வம் இருந்தாலும் குடும்பவாழ்வில் அவனின் வாழ்க்கையைப் பயனற்றவள் ஆக்குகின்றாள்.இங்கு இதனை பெண்ணின் மீது மட்டும் நாம் ஏற்றுவது ஏன்?

அத்தோடு குடும்பத்தை நடத்த கணவன் காலடியில் இருந்து அவன் சொல்வதை அப்படியே கேட்டு செய்வதல்ல. நாணயமாகவும் சாதுரியமாகவும் இல்வாழ்வை நகர்த்த வேண்டும். பெண்கள் பெருமளவில் குடிப்பதில்லை. ஆண்கள்தான் குடித்து குடும்பத்திற்கு உழைப்பை வழங்காமல் வீண்டிக்கின்றனர். இந்த நெறிகள் எல்லாம் அவர்களுக்குதான் விளக்கப்பட வேண்டும்.

'மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன் '

கற்புடைய மனைவி நல்ல புதல்வர்களைப் பெறுவது பெண்ணின் அணிகலன் ஆகும். இங்கே குழந்தைகள் பிறப்பிலும் வளர்ப்பிலும் ஆண்,பெண் இருசாராரும் ஒருமித்ததே வாழ்வு. அது எப்படி எல்லா குற்றங்களையும் பெண்ணன்மீது ஏற்றி கூறமுடிந்தது.

'மனைவிழைவார் மாண்பய னெய்தார் வினைவிழைவார்

வேண்டாப் பொருளு மது'

மனைவி சொல் கேட்பவன் எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியாததுடன், பயன்களையும் அடையமாட்டான். பெண்ணின் அறிவு கூர்மையானது. அவள் தூரநோக்கில் செயற்படகூடிய வல்லமை கொண்டவள். அவளது சொல் பயனற்று போகின்றது என்றால் அங்கே அதனை செயற்படுத்திய ஆணின் செயலில் பிழை இருக்க முடியாதா? அப்படி இருந்தாலும் முன்னேற்றம் இருக்காது. அப்படியிருக்க அவளை மட்டம்தட்டி காட்டுவது எதனால்?

'மனையானை யஞ்சு மறுமையி லாளன்

வினையாண்மை வீறெய்த லின்று'

மனைவி சொல் கேட்பவன் அறம் செய்ய முடியாது, மறுமையில் பயன் பெறமாட்டான். அத்துடன் பெரியோர் மதிக்கமாட்டார். தன் தாய் சொல் கேட்டு ஒருவன் நடக்கமுடியும். அவள் மனைவியாக இருந்தால் ஏற்கப்படாது. இங்கே ஆண் பெண் சரிசமமாக மதித்திருந்தால் இப்படியாக குறள் பிறந்திருக்காது .

அக்காலத்தில் வாழ்வியல் நடைமுறை எப்படி இருந்திருக்கும் என சற்று சிந்தித்துப் பாருங்கள். பெண் எப்படி அடிமைப்படுத்தப்பட்டிருப்பாள்.திருவள்ளுவர் பெண்ணை இழிவுபடுத்தி, ஆணாதிக்கத்தை மெச்சியிருப்பதாக என்னால் பார்க்க முடிகின்றது. உலகப்பொதுமறை என்பது ஆணுக்கு மட்டுமென்றால் இது சரியான நூல்தான். ஆனால் இங்கே பெண்களும் வாழ்கின்றனர்.

பவதாரணி ராஜசிங்கம்

 


Add new comment

Or log in with...