கட்டடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த வருமானம் ரூ.425 மில்லியன்

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்‌ஷவின் திட்டமிடல் மற்றும் ஆலோசனைக்கமைய கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணிப்பு, கட்டடப் பொருட்கள் கைத்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்தவின் மேற்பார்வையின் கீழ் வரையறுக்கப்பட்ட கட்டடக் கூட்டுத்தாபனம் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சுமார் 425 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்தது.

கடந்த வருடங்களில் மாதத்திற்கு 15 இலட்சம் ரூபாவருமானம் மாத்திரமே பெற்று வந்த வரையறுக்கப்பட்ட கட்டடப் பொருட்கள் கூட்டுத்தாபனம், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆலோசனையின் பின்னர் கடந்த ஜூலை மாதம் மட்டும் 155 மில்லியன் ரூபா வரை வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளதென இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினால் வரையறுக்கப்பட்ட கட்டடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் புதுப்பிக்கப்பட்ட விற்பனை மத்தியஸ்தானம் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் மேலும் நாடெங்கிலும் 17 கிளைகள் ஆரம்பிக்கப்பட்டு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த காலங்களில் மூடப்பட்ட 03 கிளைகளை மீண்டும் திறப்பதற்கு கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்தது.

அரச நிறுவனங்கள் தொடர்ந்தும் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த வேளை, வரையறுக்கப்பட்ட கட்டடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் இவ்வாறான இலாபம் ஈட்டலானது வியாபார உலகிற்கும் தேசிய பொருளாதாரத்திற்கும் நல்ல அறிகுறியாகும் என வரையறுக்கப்பட்ட கட்டடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் புதிய நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் திட்டமிடல் மற்றும் ஆலோசனைக்கமைய, இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா, கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணிப்பு கட்டடப் பொருட்கள் கைத்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் கீர்த்தி ரஞ்சித் அபேகுணவர்தன, வரையறுக்கப்பட்ட கட்டடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மஹேந்திர விஜேசேகர, பொது முகாமையாளர் திலும் இரத்நாயக்க போன்றோரால் புதிய திட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

நிர்மாணிப்பு துறைகளுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும், வீடமைப்பிற்குத் தேவையான உள்ளக வெளியக அலங்காரப் பொருட்களும், வீட்டுத் தோட்டம் அலங்கரிப்பு மற்றும் விவசாயத்திற்குத் தேவையான பொருட்களும், கைத்தொழில், பொறியியல் சேவைகள், சூரியசக்தியினால் ஒளி பெறுவதற்கான அனைத்துப் பொருட்களும் இந்தக் கிளைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் கட்டட அமைப்பிற்காக பயன்படுத்தப்படும் சிமெந்துக் கற்கள், பீங்கான், செங்கற்கள் போன்றவையும் விற்பனை செய்யப்படுகின்றன. இதனைத் தவிர இந்த வருடத்தில் மேலும் பல செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அதன் கீழ் பொலன்னறுவை மணல் செயற்றிட்டம் மற்றும் பேரெலிய கடல் மணல் செயற்றிட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன.

வாடிக்கையாளர்களுக்கு ஒன்லைன் முறையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும். அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனம், அரச அபிவிருத்தி மற்றும் வடிவமைப்பு சட்ட கூட்டுத்தாபனம், அரச கைத்தொழில்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட கூரைகள், ஜன்னல்கள் மற்றும் சிமெந்து சிலின்டர்கள் ஆகியவையும் இங்கு விற்பனைக்குள்ளன.

அனைத்து அரச ஊழியர்களுக்கும் சலுகை விலையில் பொருட்கள் வழங்கல், அரச நிறுவனங்களில் தலைமை வழங்குனராக செயற்படல், கூட்டுத்தாபனத்தின் விடுமுறை தங்குமிடங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கல், கூட்டுத்தாபனத்திற்கு தேவையான ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்தல், வழங்குனர்களின் வலைப்பின்னலை உருவாக்குதல், நேரடிப் பொருட்கள் மற்றும் கட்டடப் பொருட்களை வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல் போன்ற சேவைகள் இங்கு வழங்கப்படுகின்றன.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த, அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா ஆகியோரினாலேயே வரையறுக்கப்பட்ட கட்டட கூட்டுத்தாபனம் இந்நிலைமைக்கு உயர்த்தப்பட்டதென கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் திலும் ரத்நாயக்க கூறினார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் பணிப்புரைக்கமைய புதிய திட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

டப்ளியூ.பிரசாத் மஞ்சு...
(நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரின் ஊடக செயலாளர்)

 


Add new comment

Or log in with...