துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான ரிஷாட்டின் மைத்துனருக்கு பிணை

துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான ரிஷாட்டின் மைத்துனருக்கு பிணை-Rishad Bathiudeen's Brother in-law Released on Bail

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட, அவரது மைத்துனர் (மனைவியின் சகோதரர்) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்று (16) கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவரது பிணைக் கோரிக்கையை ஏற்ற நீதவான், அவருக்கு பிணை வழங்குமாறு உத்தரவிட்டார்.

அதற்கமைய, ரூ. 500,000 கொண்ட சரீர பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அவருக்கு வெளிநாடு செல்வதற்கு தடைவிதித்ததோடு, அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.

அத்துடன், குறித்த வழக்கு தொடர்பான சாட்சிகள் மற்றும் முறைப்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபடுவதிலிருந்து தவிர்ந்திருக்க வேண்டுமெனவும் நீதவான் இதன்போது எச்சரிக்கை விடுத்தார்.

ரிஷாட் பதியுதீன் எம்.பியின் வீட்டில் பணி புரிந்த ஹிஷாலினி எனும் சிறுமி மரணமடைந்த சம்பவம் தொடர்பில், எம்.பியின் மனைவி, மாமனார், சிறுமியை அழைத்து வந்த தரகர் ஆகியோர் கடந்த ஜூலை 23ஆம் திகதி கைது செய்யப்பட்டதோடு, இவ்வழக்கு விசாரணைகளில் வழங்கப்பட்ட சாட்சியங்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், எம்.பியின் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பெண்ணை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் எம்.பியின் மைத்துனரும் அன்றையதினம் கைது செய்யப்பட்டிருந்த நிலையி. தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய, கைது செய்யப்பட்டுள்ள ஏனைய மூவரும் ஓகஸ்ட் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட, ரிஷாட் பதியுதீன் எம்.பிக்கு. நாளை மறுதினம் (18) வரை விளக்கறியல் விதிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...