உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் 25 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

Easter Sunday Attack-Attorney General Files Indictment Against 25 Suspects Under 23270 Charges

கடந்த 2019 ஏப்ரல் 21இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக 25 சந்தேகநபர்களுக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்ட மாஅதிபர் நேற்றைய தினம் ஆரம்பகட்ட குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளார்.

நெளபர் மெளலவி, சஜீத் மெளலவி, மொஹமட் மில்ஹான், சாதிக் அப்துல்லாஹ், கபூர் மாமா என்று அழைக்கப்படும் ஆதம் லெப்பே, மொஹமட் அனஸ்டீன் மொஹமட் றிஸ்வான் உள்ளிட்ட 25 பேருக்கு எதிராகவே குறித்த குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், கட்டுவாபிட்டி புனித செபஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பு புனித சீயோன் தேவாலயம் ஆகிய தேவாலயங்கள் மற்றும் கிங்ஸ்பெரி ஹோட்டல், ஷங்ரிலா ஹோட்டல், சின்னமன் கிராண்ட் ஹோட்டல், தெஹிவளை ட்ரொபிகல் இன் விடுதி, தெமட்டகொடை ஆகிய எட்டு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக அவர்கள் மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்த சட்ட மாஅதிபர், குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூவரடங்கிய நீதிபதிகள் குழுவை நியமிக்குமாறு பிரதம நீதியரசரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

குறித்த குற்றப்பத்திரிகைகளில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர்கள் மீது, சதி செய்தல், அதற்கு திட்டமிடுதல், உதவி செய்தல், வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிகள் சேகரித்தல், கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


Add new comment

Or log in with...