செயற்கை இரசாயனங்களை பயிர்ச் செய்கையில் பயன்படுத்தினால் வியாதிகளே எமக்கு விளைவு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் உருவான 'சௌபாக்கியா' தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், சேதனப் பயளை மற்றும் இயற்கை பீடைநாசினி பாவனை மூலம் எதிர்கால சந்ததியினரை நோயற்ற ஆரோக்கியமான சமூகமாக மாற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இயற்கையைப் புறக்கணித்து நாங்கள் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட உரங்களையும், இரசாயனங்களையும் பயன்படுத்துவதன் விளைவு 'நோயுடன் கூடிய வாழ்க்கை' என்பது ஆதாரபூர்வமாக கண்டறியப்பட்டதன் விளைவே இன்று சேதனப் பசளை, இயற்கை பீடைநாசினி என்பனவற்றின் பாவனை குறித்து சிந்திக்கச் செய்துள்ளது என்றால் அதனை யாரும் மறுக்காது ஏற்றுக் கொள்வர்.

நவீன விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப மனித வாழ்வியலும் நாளுக்கு நாள், நிமிடத்திற்கு நிமிடம் மாறிக் கொண்டே வருகின்றது. இறுதியில், அதன் தாக்கம் மனிதன் ஆரோக்கியத்தை இழந்து, நோய் நொடியுடன் தவிக்க நேரிட்டுள்ளது. இதுகுறித்து, ஒவ்வொருவரும் தனியாகவும், கூட்டாகவும் சிந்திக்க வேண்டிய காலம் எம்மை நெருங்கியுள்ளது எனலாம்.

நாட்டின் எதிர்கால சந்ததியினரை நோய்நொடியற்ற ஆரோக்கியமான சமூகமாக மாற்ற வேண்டிய தேவை எங்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. அதற்கான தயார்படுத்தல்களை நாங்கள் இப்போதிருந்து உடனடியாகவே ஆரம்பிக்க வேண்டியுமுள்ளது. அதனையே ஜனாதிபதியும், அதிகாரிகளும் தற்போது 'சௌபாக்கியா' தேசிய வேலைத் திட்டத்தின் மூலம் வலியுறுத்தி வருகின்றனர். இது பாராட்டுக்குரியது.

நெற்செய்கையாக இருந்தாலென்ன, உப-உணவுப் பயிர்ச் செய்கையாக இருந்தாலென்ன நச்சுக் கலப்பற்ற மனித நுகர்வுக்குப் பொருத்தமானதாகவும், பாதுகாப்பானதாகவும், தரம் நிறைந்ததாகவும் உணவுகளை உற்பத்தி செய்ய வேண்டியது அவசியமாகும். சேதனப் பயளை மற்றும் இயற்கை பீடைநாசினி பிரயோகத்தின் மூலம் உற்பத்தியை மேற்கொள்வதே காலத்தின் அவசியமாகும். இதனையே 'சௌபாக்கியா' வேலைத் திட்டம் வலியுறுத்துகின்றது.

கடந்த காலங்களில் செயற்கை உரங்களையும், இரசாயனங்களையும் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட உற்பத்திகளைக் கைவிட்டு, நாங்கள் உடனடியாக இயற்கைக்குத் திரும்ப வேண்டிய அவசியமும், அவசரமும் ஏற்பட்டுள்ளது. அது குறித்து விவசாயத் திணைக்கள உயர் அதிகாரிகளும், உத்தியோகத்தர்களும் எங்களுக்கு விளக்கமளித்துக் கொண்டிருக்கின்றனர்.

இத்திட்டத்தின் கீழ், சேதனப் பயளை மற்றும் இயற்கை பீடைநாசினி பாவனை மூலம் விவசாயச் செய்கையை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு நிகழ்வொன்று அக்கரைப்பற்றில் அண்மையில் இடம்பெற்றது. இரசாயன உரம் மற்றும் கிருமிநாசினி என்பனவற்றின் பாவனை எதிர்காலத்தில் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து பிரஸ்தாப விழிப்புணர்வு வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அக்கரைப்பற்று விவசாயப் போதனாசிரியர் எஸ்.எல்.எம்.அஷ்ஹர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.என்.சப்றினா ஆகியோரின் ஏற்பாட்டில் கொவிட் 19 சுகாதார நடைமுறைகளுக்கமைவாக இடம்பெற்ற இந்நிகழ்வில், பொதுமக்கள், விவசாயிகளை அறிவூட்டும் வகையில் ஒலிபெருக்கி அறிவித்தல் வழங்கப்பட்டதுடன், விபரமடங்கிய துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.

எதிர்வரும் காலங்களில் நெல் மற்றும் உப-உணவுப் பயிர்ச் செய்கையின் போது, சேதனப் பயளை மற்றும் இயற்கை பீடைநாசினி என்பனவற்றின் பாவனை மூலம் தொற்றா நோய்கள் உள்ளிட்ட ஏனைய நோய்கள், பல்வேறு பிரச்சினைகளிலிருந்து பாதுகாப்புப் பெற வேண்டும் எனவும் இதன்போது தெளிவாக அறிவுறுத்தப்பட்டது.

மாகாண விவசாயத் திணைக்களத்தின் அக்கரைப்பற்று உதவி விவசாயப் பணிப்பாளர் திருமதி ஏ.ரவீந்திரன். தலைமைப் பீட விவசாயப் போதனாசிரியர் ஏ.எல்.றபீக், பாடவிதான உத்தியோகத்தர் எம்.கோகுலராஜ் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முகம்மட் றிஸான்
(அட்டாளைச்சேனை மத்திய நிருபர்)

 


Add new comment

Or log in with...