பணிப்பாளர் பதவியில் இருந்து அஷ்ரப் மாற்றப்பட்டது ஏன்?

பிரதமரின் இணைப்புச் செயலாளர் சத்தார் விளக்கம்

புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் குர்பான் கொடுப்பது தொடர்பில் முறையற்ற அறிக்கையொன்ற விடுத்ததையடுத்து முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய ஏ. பீ. எம். அஷ்ரப்பின் இடத்திற்கு உதவிப் பணிப்பாளராக கடமையாற்றிய எம். எல். எம். அன்வர் அலி நியமிக்கப்பட்டார். அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு அமைய முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்கள பதில் பணிப்பாளராக அவர் நியமிக்கப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முஸ்லிம் விவகார இணைப்புச் செயலாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் குர்பான் கொடுப்பது தொடர்பில் முறையற்ற விதத்தில் அவர் விடுத்த அறிக்கை சம்பந்தமாக பல்வேறு விமர்சனங்கள் சமூகத்திலும் அரசியல் வட்டாரத்திலும் எழுந்தன. குறிப்பாக அரசாங்கத்தையும் முஸ்லிம்களையும் தூரமாக்கும் நடவடிக்கையாக அவரது அறிக்கைகள் அமைந்திருந்தன. அண்மைக்காலமாக சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பரப்பி முஸ்லிம்களுக்கு அரசாங்கத்தின் மீது வெறுப்புணர்ச்சியைத் தூண்டக் கூடிய நடவடிக்கைகளிலே ஈடுபட்டு வந்தார்.

இவை தொடர்பில் நான் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து மாகாண உள்ளுராட்சி மன்ற அமைச்சுக்கு கடந்த மாதம் 22 ஆம் திகதி சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய ஏ. பீ. எம். அஷ்ரப் இடமாற்றம் பெற்றுச் செல்ல பணிக்கப்பட்டார். இருந்த போதிலும் குறித்த நாட்களில் அங்கு இருந்து செல்லாமல் விடுமுறையில் இருந்தமையால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பதில் பணிப்பாளர் எம். எல். எம். அன்வர் அலி கடமையினை மேற்கொள்ள முடியாமல் சிரமத்தினை எதிர்நோக்கியிருந்தார். எனவே இது தொடர்பில் கடந்த வெள்ளிக் கிழமை புத்தசாசன மத, காலாசார, அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன் இவ்வமைச்சின் செயலாளரான தேசபந்து கலாநிதி கபில குணவர்தனவை நேரில் சந்தித்து இந்த இடமாற்றம் குறித்து பேசியதைத் தொடர்ந்து உடன் அமுலுக்கு வரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற உறுதிமொழி வழங்கினார். 27 ஆம் திகதி முதல் பதில் பணிப்பாளராக எம். எல். எம். அன்வர் அலி கடமையாற்ற நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

(மாவத்தகம நிருபர்)

 

Add new comment

Or log in with...