30 வயதிற்கு மேற்பட்டோர் 100 இலட்சம் பேருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி

இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தகவல்

நாட்டில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் 100 லட்சம் பேருக்கு இதுவரை ஒரு தடுப்பூசியாவது வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

நாட்டில் 30 வயதிற்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 115 இலட்சமாகவுள்ள நிலையில் அவர்களில் 100 லட்சம் பேருக்கு இதுவரை கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க 30 வயதிற்கு மேற்பட்ட மேலும் 15 இலட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்க வேண்டியுள்ளது.

ஓகஸ்ட் மாதம் நிறைவடைவதற்கு முன்பதாக நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியைப் பெற்றுக் கொடுக்கும் சவாலை ஜனாதிபதி எமக்கு வழங்கியிருந்தார். எனினும் சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்புத் துறையினரின் ஒத்துழைப்புடன் குறித்த திகதிக்கு முன்பாக அந்த இலக்கை அடைய முடியும்.

அதற்கிணங்க 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் நிறைவு பெற்றதும் 18 வயதிலிருந்து 30 வயது வரையான தரப்பினருக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Add new comment

Or log in with...