இலங்கைத் தமிழ் அகதிகள் மீது இந்தியாவுக்கு ஓரவஞ்சனை ஏன்?

இந்திய குடியுரிமை வழங்க மறுக்கப்பட்டதற்கு கண்டனம்!

தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாதென்று இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளதையடுத்து, இவ்விவகாரம் தமிழ்நாட்டில் உணர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அரசியல்வாதிகள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

‘தமிழர் தாயகமான தமிழகத்தை நம்பி வந்த இலங்கைத் தமிழர்களை சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என இழித்துரைப்பதா?’ என்று மத்திய அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பத்து கோடி தமிழ் மக்களின் தாயகமாக விளங்கும் தாய்த் தமிழகத்தை நாடி வந்த இலங்கைத் தமிழர்களை சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் எனக் கூறி பா.ஜ.க அரசு அவமதித்திருப்பது ஒட்டுமொத்த தமிழர்களையும் பெருஞ்சினத்திற்கு ஆளாக்கியிருக்கிறது. இந்தியா என்கின்ற நாடும், அதற்கென ஒரு சட்டமும், இந்நாட்டுக்கென ஒரு கொடியும் உருவாக்கப்பட்டு இந்நாடு நாடாவதற்கு முன்பிருந்தே இந்நிலத்தை ஆண்ட பேரினத்தின் மக்களை அண்டிப் பிழைக்க வந்த ஆரியர்கள் ஆதிக்கம் செய்ய முற்படுவது வரலாற்றுப் பெருங்கொடுமையாகும் என்றும் சீமான் கண்டித்துள்ளார்.

தமிழினத்திற்கு யாதொரு தொடர்புமில்லாத பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளும், கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளும் தம்மை நாடிவந்த தமிழ் மக்களுக்கு அடைக்கலமளித்து, அரவணைத்து, ஆதரித்து அனைத்துவித அடிப்படை உரிமைகளையும் உறுதி செய்து வாழ்வளிக்கின்றன.

ஆனால், தனித்த பெரும் தேசிய இனமாகப் பத்து கோடி தமிழர்கள் பரந்து விரிந்து, நிலைத்து நீடித்து வாழும் இந்தியப் பெருநாட்டில், தொப்புள்கொடி உறவுகளான இலங்கைச் சொந்தங்களைச் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என இழித்துரைத்திருப்பது தமிழ்த் தேசிய இனத்தின் மீதான ஆரிய இனப்பகையின் வெளிப்பாடேயேயாகும்.

இந்திய நாட்டின் பூர்வீகக்குடிகளின் இரத்த சொந்தங்களைச் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் எனக் கூறுவது அதிகாரத் திமிரின் உச்சமாகும். இலங்கையிலிருந்து வந்த சொந்தங்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களா? பாகிஸ்தான், பங்களாதேசிலிருந்து அகதிகளாக வந்த இந்துக்களைச் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களென இந்நாடு கருதுமா? சீனாவிலிருந்து அகதிகளாக வரும் திபெத்திய மக்களை அவ்வாறு கூறி துரத்துமா? திபெத்தியர்களுக்கு இந்நாடு அளிக்கும் வசதிகள், சலுகைகள் என்னென்ன? அவர்களிடம் காட்டும் அக்கறை, பரிவு, பற்றில் நூற்றில் ஒரு பங்கு கூட, நாட்டுக்குப் பெருத்த பொருளாதாரப் பங்களிப்புகளைச் செய்யும் தமிழ்ப் பேரினத்தின் தொப்புள்கொடி உறவுகளான இலங்கைத் தமிழர்களிடம் காட்ட மறுப்பதேன்?

அவர்கள் தமிழர்கள் என்பதற்காக இந்த நாடு எந்தக் கூடுதல் சலுகையும் அளிக்காவிட்டாலும், குறைந்த பட்சம் மனிதர்கள் என்ற அடிப்படையிலாவது அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்திருக்கலாமே! அதனை விடுத்து, எவ்வித அடிப்படை வசதியுமின்றித் திறந்தவெளி சிறைக்கூடத்தில் கைதிகளைப் போல அவர்களை அடைத்து வைத்து, வந்த நாள் முதல் கண்காணித்துக் கடும் அடக்குமுறைகளுக்கும், சித்திரவதைகளுக்கும் ஆளாக்கி தற்போது சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் எனக்கூறி குடியுரிமையையும் வழங்க மறுத்து, வஞ்சித்திருப்பது தமிழினத்தின் தன்மான உணர்வையும், இனமான உணர்வையும் சீண்டிப் பார்ப்பதாகும் என்று சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உலகின் மற்ற நாடுகள் எல்லாம் தங்களை நாடி வந்த மக்களை, தங்கள் நாட்டுக் குடிகள் போலப் பாவித்துக் குடியுரிமை வழங்கிப் பாதுகாக்கும் சூழலில், ஒரு தலைமுறை கடந்து இத்தனை ஆண்டுகளாக இந்த நிலத்தில் வாழ்ந்தும் எம்மக்களுக்குக் குடியுரிமையை மறுத்துப் புறந்தள்ளுவது எந்தவகையில் நியாயம்

இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மறுக்கும் இந்திய அரசு, தனது முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க அரசு தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளவாறு இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கச் சட்டப் போராட்டமும், அரசியல் நெருக்கடியும் கொடுக்க வேண்டும் என்று சீமானின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...