இயல்பு நிலையை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்போம்!

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் கடந்த சில மாதங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை தொடக்கம் நீக்கப்பட்டுள்ளன. நாடு மீண்டும் வழமையைப் போன்று இயங்கும் வகையில் இக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இதன்படி அலுவலகங்களும் இன்று முதல் வழமை போன்று செயற்படுகின்றன.

ஊழியர்கள் தங்களது கடமைகளுக்கு சமுகமளிக்க வேண்டுமெனக் கேட்கப்பட்டுள்ளனர். எனவே இத்தனை காலமும் அரசாங்க நிறுவனங்களில் முடங்கியிருந்த பல கருமங்கள் இன்று தொடக்கம் வழமைக்குத் திரும்புமென எதிர்பார்க்கப்படுகின்றது. பொதுப்போக்குவரத்து சேவைகளும் ஓரளவு வழமைக்குத் திரும்புமென எதிர்பார்க்கப்படுவதனால், நாடு மீண்டும் வழமைக்கு வந்து விட்டதென்றே கருத முடியும்.

நாட்டில் ஏராளமான மக்களுக்கு இதுவரை கொரோனாவுக்கான தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன. அதேசமயம் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாடெங்கும் தற்போது துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நாட்டில் முப்பது வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட வேண்டுமென்பதே அரசாங்கத்தின் திட்டமாகும். மக்களுக்குத் தடுப்பூசி வழங்குவதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட அக்கறையுடன் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.

எனவே நாட்டில் கொரோனா தாக்கத்தின் பாதிப்பு பெருமளவில் குறைக்கப்பட்டு விடுமென்பதே பொதுவான நம்பிக்கையாக இருக்கின்றது. இதனைக் கருத்திற் கொண்டே நாட்டில் வழமையான செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முடிவு செய்யப்பட்டிருக்கின்றது. நீண்ட கால முடக்க நிலைமையிலிருந்து நாடு மீண்டெழ வேண்டுமென்பதே அரசாங்கத்தின் திட்டமாக உள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்று ஆரம்பமானது தொடக்கம் இதுவரையான சுமார் ஒன்றரை வருட காலப் பகுதியில் எமது நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மிக அதிகமாகும். குடும்ப பொருளாதாரம் மாத்திரமன்றி, ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரமுமே பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றது. கொரோனா பெருந்தொற்றானது பொருளாதாரத்தில் மாத்திரமன்றி அனைத்துத் துறைகளிலும் மிக மோசமான பாதிப்புகளை உண்டாக்கியிருக்கின்றது.

நாட்டை தொடர்ந்தும் முடக்க நிலையில் வைத்திருப்போமானால் இப்பாதிப்புகளிலிருந்து எம்மால் இலகுவில் மீண்டெழ முடியாமல் போய் விடும். ஏனெனில் உலகை விட்டு கொரோனா தொற்று முற்றாக விடைபெறுவதற்கு இன்னும் சில வருடங்கள் செல்லக் கூடுமென்பதே மருத்துவ நிபுணர்களின் கருத்தாக உள்ளது. அதுவரை உலகம் தனது இயக்கத்தை நிறுத்தி வைத்திருக்க முடியாது. சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒவ்வொருவரும் உரியபடி பேணியவாறு வழமை நிலைமையை மீண்டும் ஏற்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டுமென்பதே உலகின் இன்றைய சிந்தனை ஆகும்.

ஒருபுறத்தில் கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொண்டபடி, மறுபுறத்தில் வழமையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதே உலகின் இன்றைய எண்ணமாக இருக்கின்றது. இத்தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் ஒவ்வொருவராலும் சுகாதாரப் பழக்கவழக்கங்கள் முறையாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அதேசமயம் தடுப்பூசி ஏற்றிக் கொள்வது கட்டாயமாக்கப்பட வேண்டும். இவையிரண்டின் ஊடாகவே எம்மால் கொரோனாவை வெற்றி கொள்ள முடியுமென்பதே இன்றைய நம்பிக்கையாகும்.

கொவிட் தடுப்பூசியை மக்கள் ஏற்றிக் கொள்வதன் மூலமே உலகில் கொரோனாவை முடிவுக்குக் கொண்டு வர முடியுமென்பதே உலக சுகாதார நிறுவனம் உட்பட சர்வதேச அமைப்புகள் ஒவ்வொன்றினதும் நம்பிக்கையாக இருக்கின்றது. உலக மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் உலக சுகாதார நிறுவனம் அதிக முயற்சி மேற்கொண்டு வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. உலக நாடுகளைப் பொறுத்தவரையில் மக்களுக்குத் தடுப்பூசி வழங்குவதில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டுள்ள நாடுகளில் இலங்கையும் முன்னணியில் உள்ளது.

எனினும் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில் எமது நாட்டு மக்களில் பலரிடம் இன்னுமே போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லையென்றே கூற வேண்டியுள்ளது. தடுப்பூசியின் நன்மைகள் குறித்து மக்கள் பலரிடம் இன்னுமே முழுமையான அறிவு ஏற்படவில்லை. அதுமாத்திரமன்றி, கொரோனா தடுப்பூசி சம்பந்தமாக மக்கள் பலரிடம் அச்சம் கலந்த போலியான நம்பிக்கைகள் உலவுகின்றன. அந்த அச்சத்தை சமூக ஊடகங்களில் பரப்பும் காரியத்திலும் பலர் ஈடுபடுகின்றார்கள். இதன் காரணமாக பலர் இன்னுமே தங்களுக்கான தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளாமல் இருக்கின்றார்கள்.

தடுப்பூசி விடயத்தில் சமூகத்தில் ஆதாரமற்ற வீணான அச்சம் நிலவுகின்றது. இந்த அச்சத்துக்கு உரமூட்டும் வகையில் தடுப்பூசி சம்பந்தமாக பிரதிகூலமான செய்திகளை இணையத்தளங்கள் வெளியிட்டு வருவதையும் காண முடிகின்றது. எதிரும் புதிருமான தகவல்களை இணையத்தளங்கள் வெளியிடுவதால் மக்கள் அச்சமும், குழப்பமும் அடைகின்றனர். இதனால் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளில் தாமதம் ஏற்படுகின்றது.

மக்கள் வீண் குழப்பமடைய வேண்டிய அவசியமில்லை. மருத்துவ அறிவியலின் மகத்தான கண்டுபிடிப்புதான் கொரோனாவுக்கான தடுப்பூசி ஆகும். அறிவியலாளர்களின் கண்டுபிடிப்புகள் மீது ஆதாரமற்ற புரளிகளைக் கிளப்பும் அறிவிலிகளின் பதிவுகள் குறித்து மக்கள் வீண் குழப்பமடைய வேண்டியதில்லை. தடுப்பூசியைத் தயக்கமின்றிப் பெற்றுக் கொண்டபடி நாட்டை வழமைக்குக் கொண்டு வருவதில் ஒவ்வொருவரும் ஒத்துழைக்க வேண்டும்.


Add new comment

Or log in with...