புத்தளத்திலிருந்து வருகை தந்த மீனவரால் முல்லைத்தீவில் உருவெடுக்கும் பேராபத்து!

புத்தளம் மாவட்டத்தில் இருந்து வந்து நாயாறு பகுதியில் குடியமர்ந்து கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடும் மீன்பிடித் தொழிலாளர்களால் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் பாரிய பிரச்சினைகளை அனுபவிக்கின்றனர். புத்தளத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் முல்லைத்தீவு கரையோரம் வாடி அமைத்துள்ளனர்.

யூலை மாத தொடக்கத்தில் இருந்து இதுரை அவர்களில் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் தங்களை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்குமாறு கோரி சமீபத்தில் போராட்டம் நடத்தினர். அதனால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நாயாறு மீனவர்களால் சுகாதார அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இவர்களிடம் முல்லைத்தீவு மாவட்டத்தில் வசிப்பதற்கான எந்தப் பதிவும் இல்லை. இவர்களுக்கான கொவிட் கட்டுப்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதில் சுகாதார பிரிவினர் சவால்களை எதிர்கொள்கின்றனர்.

சமூகப் பொறுப்பற்ற மக்களாகவும், பாமர மக்களாகவும், அரசாங்க கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு கட்டுப்படாத மக்களாகவும் இவர்கள் காணப்படுகின்றனர். ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வாழ்ந்து வரும் இந்தப் பகுதிக்கு இங்குள்ள மக்கள் செல்வதற்கே அஞ்சுகின்றனர். அங்கு சென்றால் கொரோனா தொற்று ஏற்படுமென மக்கள் அஞ்சுகின்றனர்.

புத்தளத்தில் இருந்து பருவகால மீன்பிடிக்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாற்று பகுதிக்கு செல்வதற்கு இவர்களுக்கு அனுமதி கொடுத்தது யார்? இவ்வாறான வினா இங்கு எழுந்துள்ளது. இந்த ஆண்டு எவருக்கும் அவ்வாறு அனுமதி கொடுக்கப்படவில்லை என்று கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஆயிரம் வரையான மீனவர்கள் சுமார் 300 படகுகளுடன் இங்கு வந்து தொழில் செய்வதற்கு யார் அனுமதித்தார்கள்? அவர்கள் தொடர்பிலான பதிவுகள் யாரிடம் உள்ளன? இவையெல்லாம் விடை தெரியாத கேள்விகள் ஆகும்.

இதேவேளை கடற்றொழில் என்ற போர்வையில் இவர்கள் முல்லைத்தீவிற்கு வருவதன் நோக்கம் என்ன சட்டவிரோத தொழிலில் ஈடுபடுவதற்கெனவும் தகவல்கள் உலவுகின்றன.

புத்தளம் பிரதேச மீன்பிடியாளர்களால் இங்குள்ள அரச சுகாதார உத்தியோகத்தர்கள் தங்கள் கடமையினை முழுமையாக செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். முடக்கப்பட்டிருந்த இந்தப் பகுதியில் இருந்து 379 பேருக்கு பி.சி.ஆர் செய்யப்பட்டதில் 24.07.2021 வரை 53 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் முடக்கப்பட்ட பகுதியில் உள்ள அனைவருக்கும் பி.சி.ஆர் செய்வதற்காக 24.07.2021 அன்று சுகாதாரப் பிரிவினர் சென்ற போது அங்கிருந்த புத்தளம்வாசிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

நாட்டில் மக்கள் தங்களுக்கு கொரோனா தடுப்பூசி வேண்டும் என வேண்டி நிக்கும் இந்த வேளையில், இந்த மக்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துழைக்காமையானது கவலையளிக்கின்றது.

(புதுக்குடியிருப்பு விசேட நிருபர்)


Add new comment

Or log in with...