மட்டு. மாநகர ஆணையாளர் குறித்து கிழக்கு ஆளுநரிடம் முறைப்பாடு

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தெரிவிப்பு

மட்டக்களப்பு மாநகர சபையின் தற்போதைய ஆணையாளரின் சேவை எமது சபைக்கு தேவையில்லை. இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநருக்கு மாநகர சபை தெளிவாக தெரிவித்துவிட்டது. ஆணையாளருக்கு எதிராக மட்டக்களப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாநகர முதல்வர் தி.சரவணபவன் வியாழக்கிழமை (22)தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபை, ஆணையாளருக்கு எதிராக மட்டக்களப்பு உயர் நீதி மன்றில் முன்வைத்திருக்கும் வழக்கு வியாழக்கிழமை (22) விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது. இவ் வழக்கிற்கு மாநகர சபையின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே முதல்வர் தி.சரவணபவன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இதுபற்றி தெரிவிக்கையில், மாநகர சபையின் செயற்பாடுகள் அனைத்திற்கும் மாநகர சபையே பொறுப்பாகவும், உச்சபட்ச அதிகாரங்களைக் கொண்டதாகவும் இருக்கும். அரசினால் நியமிக்கப்படும் மாநகர ஆணையாளர் சபையின் அறிவுரைகளையும், ஆலோசனைகளையும், புறந்தள்ள முடியாது. ஆணையாளரின் செயற்பாடுகளில் அனேகமானவை உள்ளூராட்சிச் சட்டங்களையும் விதிகளையும் மீறியவைகளாக அல்லது புறந்தள்ளியவைகளாகவே இருந்து வருகின்றன.

ஆதலால் மட்டக்களப்பு மாநகர சபை தற்போதைய ஆணையாளரின் சேவையில் திருப்தி காணவில்லை. ஆதலால் அவரை மீளப்பெறுமாறு கிழக்கு மாகாண ஆளுநர், உள்ளூராட்சி ஆணையாளர், பிரதம செயலாளர், ஆகியோரை கோரியுள்ளது.

இவைகளுக்கு மத்தியில் ஆணையாளரின் தப்பான செயற்பாடுகளுக்கு எதிராக மட்டக்களப்பு உயர் நீதிமன்றத்தில் மாநகர சபையால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

மாநகர சபையின் ஆணையாளருக்கு எதிராக வழங்கப்படுகின்ற தீர்ப்புக்கு நாம் ஆட்சேபனை தெரிவிக்க மாட்டோம் என மாகாணப் பணிப்பாளர் மன்றில் தெரிவித்திருக்கிறார்.

நீதிமன்றம் இவ்வழக்கை அடுத்த மாதத்தில் விசாரிக்க இருக்கிறது என்றார்.

மட்டு. குறூப் நிருபர்


Add new comment

Or log in with...