கண்டி மாவட்டத்தில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் துரித கதியில்

மத்திய மாகாணத்தில் 30 முதல் 60 வயது உட்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் திட்டம் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது. கண்டி மாவட்டத்தில் ஹரிஸ்பத்துவ மற்றும் பூஜாபிட்டிய உள்ளிட்ட பல பிரதேச செயலகப் பிரிவுகளில் தடுப்பூசி ஏற்றும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது என்று ஹாரிஸ்பத்துவ பிரதேச செயலாளர் மொஹான் தர்மதாச தெரிவித்தார்

இத்திட்டத்தின் கீழ் கண்டி மாவட்டத்தில் குண்டசாலை பிரதேச மக்களுக்கு முதலில் தடுப்பூசி வழங்கப்பட்டதாக மாவட்ட தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் பஸன் ஜயசிங்க தெரிவித்துள்ளார் .

கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு தொடர்ந்து எட்டு நாட்கள் கட்டம் கட்டமாக இம்மாதம் 26ம் திகதி வரை தடுப்பூசிகள் வழங்கப்பட இருப்பதாகவும், இதற்காக 101 தடுப்பு மருந்தேற்றல் நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன எனவும் கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னக்கோன் தெரிவித்தார்

இவ்வாறு தடுப்பூசி பெறுபவர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் குறுகிய காலத்தில் தடுப்பூசி போட முடிந்தது என்றும், வலது குறைந்தோர்களுக்கு விசேட வசதிகள், இலகுவான அணுமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டதாகவும் மாவட்ட செயலாளர் தெரிவித்தார். மஹகந்த, ஹிந்தகல மக்களுக்கு கெட்டம்பே மஹாநாம கல்லூரியிலும், ஒகஸ்ட்டாவத்த, போவத்த ஆகிய பிரதேச மக்களுக்கு ஒகஸ்ட்டாவத்த இளைஞர் நிலையத்திலும் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

மேலும் அடுத்தடுத்த நாட்களில் தடுப்பு மருந்தேற்றும் இடங்கள் பற்றி பிரதேச செயலகங்கள் ஊடாக கிராம உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்படவுள்ளது.

கிராம உத்தியோகத்தர் வழங்கும் பத்திரத்தை பெற்றுக் கொண்டு உரியவர்கள் தடுப்பு மருந்தேற்றல் நிலையங்களுக்கு செல்ல வேண்டும் என சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள் எனவும் மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

எம்.ஏ.அமீனுல்லா

 


Add new comment

Or log in with...