இணையவழி கல்வியில் மாணவர் முழு அக்கறை செலுத்த வேண்டும்

நாட்டு மக்களுக்குத் தேவையான கொரோனா தடுப்பூசி மருந்துகள் கடந்த ஒரு வார காலமாக பெருமளவில் வந்து சேர்ந்துள்ளன. சர்வதேசத்தினால் பரிந்துரைக்கப்பட்ட வயதெல்லைக்கு ஏற்ப அனைவருக்குமே தடுப்பூசிகளை ஏற்றுவதற்கான வேலைத் திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் விசேட அறிவுறுத்தலின் பேரில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

வயதெல்லையின்படி அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் கொரோனா தொற்றை முடிவுக்குக் கொண்டு வந்து, நாட்டை மீண்டும் வழமை நிலைமைக்கு விரைவில் கொண்டு வருவதே ஜனாதிபதியின் திட்டமாக உள்ளது. இதற்கென கடந்த வாரம் சீனாவில் இருந்து இரண்டு விமானங்களில் கொவிட் தடுப்பூசி மருந்துகள் இலங்கைக்கு அவசரமாக கொண்டு வரப்பட்டமை குறிப்பிடப்பட்டது.

இலங்கையில் இருந்து இதற்கென இரண்டு விமானங்கள் அவசரமாக சீனாவுக்கு அனுப்பப்பட்டு தடுப்பூசி மருந்துகள் கொண்டு வரப்பட்டன. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நெருக்கமான நட்புறவின் அடிப்படையிலேயே தடுப்பூசி மருந்துகள் அங்கிருந்து கொண்டு வரப்பட்டிருந்தன. இவற்றை நாட்டின் அனைத்து பிரதேச மக்களுக்கும் துரித கதியில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு தடுப்பூசி வழங்கப்படுவோரில் பாடசாலை ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை ஏற்றுவதன் மூலம் அரசாங்கப் பாடசாலைகளை சாத்தியமான அளவு விரைவாக மீண்டும் ஆரம்பிப்பதே அரசாங்கத்தின் திட்டமாக உள்ளது.

அதேவேளை, உலக சுகாதார நிறுவனத்தின் வயதெல்லை பரிந்துரைக்கு ஏற்ப எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கான திட்டத்தை அரசாங்கம் கொண்டிருக்கின்றது. அரசாங்கப் பாடசாலைகளை மாத்திரமன்றி, ஏனைய கல்வி நிறுவனங்களையும் நீண்ட காலத்திற்கு தொடர்ந்தும் பூட்டி வைத்திருப்பது நல்லதல்ல என்பதை கருத்தில் கொண்டே அரசாங்கம் இந்த நடவடிக்கைக்கு முன்னுரிமை அளித்து செயற்படுகின்றது.

இலங்கையில் கொரோனா தொற்று ஏற்பட்டு ஒன்றரை வருட காலம் கடந்திருக்கும் இவ்வேளையில், நாட்டுக்கு பல்வேறு துறைகளிலும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ஒருபுறம் இருக்கையில், மாணவர்களின் கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்தான் பாரதூரமானதாக காணப்படுகின்றன. நாட்டில் கடந்த ஒன்றரை வருட காலத்தில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மூடப்படுவதும் திறக்கப்படுவதும் வழமையாகி விட்டது. மாணவர்கள் கல்விப் புலத்தில் மாத்திரமன்றி வகுப்பறைச் சூழலில் இருந்தும் அந்நியப்பட்டுப் போயிருக்கின்றனர். இவர்களில் சின்னஞ்சிறார்களான ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பையே மோசமானதாகக் கருத வேண்டியுள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் நாட்டில் கடந்த ஒன்றரை வருட காலப் பகுதியில் அரசாங்கப் பாடசாலை மாணவர்களின் பிரதான மூன்று பரீட்சைகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. க.பொ.த உயர்தரம், க.பொ.த சாதாரண தரம், தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சை ஆகியனவே அம்மூன்றும் ஆகும். இப்பரீட்சைகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள போதிலும், அப்பரீட்சைகளுக்குத் தோற்றிய மாணவர்கள் தரப்பில் இருந்து வெளிவருகின்ற திருப்தியற்ற சில கருத்துகளையும் இவ்விடத்தில் குறிப்பிட முடியாமல் இருக்க முடியாது.

வகுப்பறையில் ஆசிரியரின் நேரடிக் கண்காணிப்பில் இல்லாத வகையில் அவ்வப்போது பாடசாலைகள் திறக்கப்பட்டும் பின்னர் மூடப்பட்டும் மற்றும் இணையவழி கற்பித்தல் ஊடாகவுமே மாணவர்கள் தங்களது பரீட்சைக்கு தயாராகி இருந்தனர். இதனை மாணவர்கள், பெற்றோர் மற்றும் கல்விச் சமூகத்தினர் திருப்தியாக ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனாலும், கொரோனா தொற்றுக் காலப் பகுதியில் கல்வி நடவடிக்கைகளை தடையின்றி எவ்வாறாயினும் முன்னெடுக்க வேண்டும் என்பதற்காகவே சிரமங்களின் மத்தியில் பரீட்சைகள் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறான நிலையில் பாடசாலைகளை தொடர்ந்தும் மூடி வைத்துக் கொண்டிருப்பது என்பது நாட்டின் எதிர்கால சந்ததியினரின் கல்வியை மழுங்கடிப்பதாகவே ஆகி விடும். மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு இன்று ஏற்பட்டுள்ள பாரிய சவால் குறித்து பெற்றோர் மாத்திரமன்றி, கல்வியியலாளர்கள் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர். பிரதானமாக ஆரம்ப வகுப்பு மாணவர்கள் பாடசாலைச் சூழலை மறந்த நிலையில் இருப்பது அவர்களது கல்வி விருத்திக்கு மாத்திரமன்றி, உளவிருத்திக்கும் ஆரோக்கியமானது அல்ல என்பதே கல்விச் சமூகத்தினரின் கருத்தாக இருக்கின்றது.

இவ்விடயத்தில் தொடர்ந்தும் நாம் பிரதிகூலமான விடயங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க முடியாது. உலகின் பல நாடுகள் கொரோனா தொற்று காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்த போதிலும், இன்று அந்நாடுகள் பாடசாலைகளை மீண்டும் திறந்து மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பித்து விட்டன.

எனவே நாமும் கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்தும் முடங்கி இருப்பதற்கு இடமளித்தல் கூடாது. பாடசாலைகளை மீண்டும் ஆரம்பித்தால் மாத்திரமே எமது மாணவர்களை கல்விப் புலத்துக்குள் மீண்டும் கொண்டு வர முடியும். அதுவரை மாணவர்கள் இணையவழிக் கல்வியை தடையின்றி மேற்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்   


Add new comment

Or log in with...