அரச நிறுவனங்களில் இடம்பெறும் துஷ்பிரயோகங்களால் அரசுக்கும் நாட்டுக்கும் பெரும் இழப்பு

அரச நிறுவனங்களில் இடம்பெறும் துஷ்பிரயோகங்களால் அரசுக்கும் நாட்டுக்கும் பெரும் இழப்பு-Government & Country Lose a Huge Money Annually Due to Non-Updating of Policies & Irregularities in Government Institutions

– அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண

அரசாங்க நிறுவனங்கள் பலவற்றில் இடம்பெறும் துஷ்பிரயோகங்கள் காரணமாக நாட்டுக்கும், அரசாங்கத்துக்கும் பெருந்தொகையான நிதி இழப்பு ஏற்படுவதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா குழு) தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும்போதே போராசிரியர் திஸ்ஸ வித்தாரண இதனைத் தெரிவித்தார். அரசாங்கக் கணக்குகள் குழுவின் இந்த அறிக்கை பல விபரங்களை உள்ளடக்கிய விரிவான அறிக்கை என்றும், இதன் ஊடாக இழங்கப்பட்ட நிதியை மீண்டும் அறவிடுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகள் முன்மொழியப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நாட்டில் கணக்காய்வு நடவடிக்கைகள் சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்லப்படுவதாகவும், பல நிறுவனங்கள் தேசிய இறைவரித் திணைக்களத்துக்கு 05-06 வருடங்கள் வரி செலுத்தாமல் இருப்பதாகவும், இதனால் இழக்கப்பட்ட வரித் தொகை அதிகமானது என்றும் பேராசிரியர் தெரிவித்தார்.

இந்த வரித்தொகை தொடர்பில் குறித்த நிறுவனங்களால் இரண்டு தடவைகள் மேன்முறையீடு செய்யவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமையே இதற்குக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு நிறுவனத்தினால் மூன்று தடவைகள் மேன்முறையீடு செய்வதற்கு இடமளிக்கப்படக் கூடாது என்றும், இதன் காரணமாக வரி செலுத்துவது பல வருடங்கள் காலதாமதம் அடைவது மாத்திரமன்றி அதன் பின்னர் இவற்றுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல நடவடிக்கை எடுப்பதால் வரியைச் செலுத்த அதிக காலம் எடுப்பதாகவும் திஸ்ஸ வித்தாரண குறிப்பிட்டார்.

அத்துடன், மேன்முறையீடு செய்வதற்கு ஆறு மாத காலம் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த கோபா குழுவின் தலைவர், இக்காலப் பகுதி வரையறுக்கப்படுவதுடன், மேன்முறையீடு செய்வதற்கான சந்தர்ப்பம் ஒன்றாகக் குறைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக நாட்டில் காணப்படும் பிழையான கொள்கைகளின் காரணமாக இழக்கப்படும் தொகை அதிகம் என்றும், யானை மனிதன் மோதல் இதற்கு சிறந்த உதாரணம் என்றும் சுட்டிக்காட்டினார்.

“தற்பொழுது காணப்படும் கொள்கைக்கு அமைய யானைகளைத் துரத்துவது என்பது ஒரு பிரதேசத்துக்குள் அடைப்பதாகவே காணப்படுகிறது. காலங்கள் சென்ற பின்னர் அங்கு போதிய உணவுகிடைக்காத சந்தர்ப்பத்தில் யானைக் குட்டிகள் மற்றும் தாய் யானைகள் இறக்கின்றன. அதேவேளை, பலம் வாய்ந்த யானைகள் கிராமங்களுக்குள் நுழைந்து தாக்குதல்களை நடத்துகின்றன” என்றும் அவர் தெரிவித்தார்.

அதனால், மக்கள் வாழும் வீடுகளைச் சுற்றியும், விவசாய நிலங்களைச் சுற்றியும் யானை வேலிகளை அமைத்து யானைகளை சுதந்திரமாக நடமாடுவதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும், இந்த முறமை கல்கமுவ பகுதியில் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டு உயர்ந்த பிரதிபலன் கிடைத்திருப்பதாகவும் கலாநிதி பிரித்விராஜ் குறிப்பிட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

இதற்காக கொள்கை மறுசீரமைப்பொன்றை மேற்கொள்வதற்கு விபரமான அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும் திஸ்ஸ வித்தாரண மேலும் குறிப்பிட்டார்.


Add new comment

Or log in with...